மன்னார் மறிச்சுக்கட்டியின் மறக்கப்பட்ட முத்துக்குளிப்பு வரலாறு!
The Book of Ceylon எனும் நூலிலிடம்பெற்ற மன்னார் முசலி பிரதேசத்திற்குட்பட்ட மறிச்சுக்கட்டி எனுமிடத்தில் கோலாகலத்துடன் மேற்கொள்ளப்பட்ட முத்துக்குளிப்பு பற்றி ஹென்றி. W. கேவ் எனும் பயணிகள் வழிகாட்டி நூலாக்குனர் எழுதிய குறிப்புக்களைக் காண்போம்.
பொதுவாக முத்துக்குளிப்பு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காலநிலை சீராயுள்ள போது மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கான முன்னாயத்த முத்துக்குளிப்பு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு முத்துக்களின் தரம் தொகை பரிசோதிக்கப்பட்ட பின்னர் முத்துக்குளிப்பு நாள் அறிவிக்கப்படும்.
இக்காலத்தில் ஆங்கிலேய அரசாங்கமே இவ்வறிவித்தலை வெளியிடும்.
1902 ஆம் ஆண்டில் மேற்கொள்ப்பட்ட முத்துச்சிப்பிகளின் கணக்கொடுப்பில் இவை எண்ணிக்கையில் ஏறத்தாள பத்தாயிரம் கோடி என வல்லுநர்கள் மதிப்பிட்டனர்.
அறிவித்தல் வெளியானதும் பாதைகளற்றதும் கடல்வழியாக வந்துசேரவேனும் பொருத்தமான துறைமுகமற்றதும் கானக மலர்கள் பூத்துக்குலுங்குவதுமான மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு ஆயிரக்கணக்கான முத்துக்குளிப்பவர்களும் உதவியாளர்களும், பேர்சியா, மியன்மார் மற்றும் அரேபிய முத்து வணிகர்களும் இடைத்தரகர்களும் ஆங்கிலேய அதிகாரிகளும் அவர்தம் பரிவாரங்களும் வந்து நிறையும். கானமலர்வனத்தில் சிப்பிகள் பெருகி அதன் ஊனத்தை அருந்த ஈக்களும் வந்து நிறையும்.
கொட்டு எனப்படும் முத்துத் தெரிவுசெய்யப் பயன்படும் கொட்டகையும் அமைக்கப்படும்.
தென்னோலைகளால் வேயப்பட்ட முத்துக்குளிப்போர் தங்கும் தற்காலிகக் கொட்டகைகளும், ஐரோப்பிய விருந்தினர் விடுதிகளும், ஆளுநரை எதிர்பார்த்து பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட தங்குமிடங்களும், தற்காலிக தபால் மற்றும் தந்தி நிலையங்கள், மருத்துவ மனைகளென ஏற்பாடுகளால் ஊரே அமர்க்களப்படும்.
நீர்த்தேவைக்காக இரண்டு நீர்க்தேக்கங்கள் அமைக்கப்பட்டன. ஒன்று குடிநீர்த் தேவைகளுக்காகவும் மற்றையது பிற தேவைகளுக்காகவும் பயன்படும்.
ஆரம்ப பணிகளின்பின் அதிகாலை வெடியொலியுடன் முரசொலி முழங்க காற்றின் துணையுடன் படகில் முத்துக்குளிப்பவர்கள் கடலுக்குச் சென்று குறித்த இடத்தில் நீரில் மூழ்கி முத்தெடுப்பர். முத்தெடுப்பவரை ஓர் கயிற்றில் தொடுத்து மற்றொருவர் படகிலிருந்து பிடித்திருப்பார். சமிக்ஞை கிடைத்ததும் அவர் முத்துக்குளிப்பவரை மேலிழுப்பார். 60- 90 விநாடிகள் வரை முத்துக்குளிப்பவர் மூழ்கி முத்தெடுப்பர். இவ்விதம் மாலை வரை இடம்பெறும்.
மீள காற்றுத் திசைமாறியதும் பாய்மரப்படகில் முதலில் கரைதொட்டு முத்தை விற்க படகுப்போட்டியே கடலில் நடக்கும். கரைசேர்ந்ததும் தலைப்பாகையணிந்த காவலர்கள் படகுகளில் முத்துச்சிப்பிகளை ஒழித்து வைத்திருக்கிறார்களா என பரிசோதிப்பர். ஏற்கனவே நங்கூரத்திலும் கயிற்றிலும் சிறு பைகளில் இவ்வாறு கட்டி மறைத்து வைத்த முத்துக்களை காவலர்கள் மீட்டுள்ளனர். ஆகவே சோதனை அவசியமானதாக கருதப்பட்டது.
முத்துக்களை கொட்டகைக்குள் கொண்டு வர அங்கிருக்கும் தலைவன் முத்துச் சிப்பிகளை குவியல்களாக பிரித்து ஒரு குவியலை முத்துக்குளித்தோருக்கு ஒதுக்குவார். அவர்கள் அவற்றை அள்ளிக்கொண்டு வெளியே வந்து காத்திருக்கும் வணிகர்களுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டு தம் களைப்பாற்ற தம் தற்காலிகக் கொட்டகைக்கு திரும்புவர்.
முத்துவணிகர் அவற்றை ஆய்ந்து முத்துக்களைப் பிரித்தெடுப்பர். முத்துக்கள் எடுத்தது போக மீதமுள்ள சிப்பிகளின் சதைக்குவியல்களை வேறு சிலர் விலைக்கு வாங்கித் தேடுவர் இவ்வாறு முத்துவணிகம் நடைபெறும்.
முத்துக்களைத் துளையிட்டு விற்போரும் இங்கு வந்து தமது செல்வமீட்டும் முயற்சியில் ஈடுபடுவர். சிறிய முதலிட்டு பெரும் நயம் பெறுவதுமுண்டு. நட்மடைவதுமுண்டு.
முத்துக்குளிப்புக்காலம் நிறைவுற்றதும் மறிச்சுக்கட்டியில் எழுந்த கலகலப்பும் குடியிருப்புக்களும் எழுந்ததை விட வேகமாகக்கலைந்துவிடும்.
1905 இல் இடம்பெற்ற முத்துக்குளிப்பு மிகப்பெரும் முத்துக்குளிப்பாக பேசப்படுகின்றது. சுமார் 80 மில்லியன் சிப்பிகள் பெறப்பட்ட இம்முத்துக்குளிப்பில் 5000 முத்துக்குளிப்பாளர்களும் அதே தொகை உதவியாளர்களும் 300 படகுகளும் பயன்டுத்தப்பட்டதோடு வருமானமாக 250,000 பவுண்ட் பெறப்பட்டதோடு மூன்றிலிரண்டு வருமானத்தை அரசு தனதாக்கிக்கொண்டு மீதியை வழக்காறுகளின் படி முத்துக்குளிப்பாளர்களுக்கு வழங்கியது. அதாவது மொத்தம் ஏறத்தாழ 83,333 பவுண்ட் ஆகும்.
இருப்பினும், இது ஒரு விதிவிலக்கான அபரிதமான அறுவடையாகும். முத்து மீன்பிடிப்பதற்கான முழுமையான உரிமை அப்போது அரசாங்கத்தால் 'சிலோன் கம்பெனி ஆஃப் பேர்ல் ஃபிஷர்ஸ்' (Ceylon Company of Pearl Fishers) நிறுவனத்திற்கு ஆண்டுக் குத்தகையாக £20,000-க்கு விடப்பட்டுள்ளது. "முத்து நகரம்" (Pearl Town) பகுதியில் உள்ள மனைகளின் வாடகையுடன் சேர்த்து மொத்தம் £25,000 வருவாய் உறுதி செய்ய
ப்படுகிறது — கடந்த ஆண்டுகளின் சராசரியின்படி இது ஒரு நியாயமான தொகையாகும்.
எழுத்தாக்கம்:- Antonyfernando Jeniefar