தமிழ்த் தேசிய பற்றாளர் சிவாஜிலிங்கத்தின் உடல் தீயுடன் சங்கமம்
இரண்டாம் இணைப்பு
மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (16) திங்கட்கிழமை காலை நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது ஆளுநருடன் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டு அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பில் ஆளுநர் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், அவர் பல்வேறு பதவிகளை வகித்திருந்தபோதிலும், ஒருபோதும் தனக்காகவோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்காகவோ தனிப்பட்ட உதவிகளையோ சலுகைகளையோ கோரியதில்லை என்றும், தனது மக்களின் உரிமைகளுக்காகவே குரல் கொடுத்தவர் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
தமிழ்த் தேசிய பற்றாளர் சிவாஜிலிங்கத்திற்கு பெருந்திரளானோர் அஞ்சலி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான மறைந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (14) நள்ளிரவு காலமான சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் வல்வெட்டித்துறை, நெடியகாடு, கல்றோட் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று (16) காலை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருவதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அஞ்சலி நிகழ்வு
இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனும் சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் அன்னாரின் பூதவுடல் வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

