ஓய்வு பெறும் தோனி.. புதிய பதவி குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஓய்வு பெறும் தோனி.. புதிய பதவி குறித்து வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, ஐ.பி.எல் (IPL) கிரிக்கெட் தொடரிலிருந்து வீரராக ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணி ஆலோசகராக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் 

இன்று (17) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள விசேட பதிவின் ஊடாக இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

 

சுமார் 18 ஆண்டுகால ஐ.பி.எல் பயணத்திற்குப் பின்னர் ஓய்வு பெற்றுள்ள தோனி, இனி மைதானத்திற்கு வெளியே இருந்து இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தோனியின் இந்தப் புதிய பயணம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன், "எம்.எஸ். தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை.

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வெற்றிகள், பின்னடைவுகள் என அனைத்திலும் நாம் ஒன்றாகப் பயணித்து வளர்ந்துள்ளோம்.

2008 ஆம் ஆண்டு தோனி எமது அணியில் இருக்க வேண்டும் என நான் வலியுறுத்தியதே நான் எடுத்த மிகச்சிறந்த தீர்மானம். இது எப்போதும் அவரது இல்லமாகவே இருக்கும்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.