ஓவியர் அ. மாற்கு” : ஈழத்து நவீன ஓவியத்தின் பிதாமகன்
27 செப்டம்பர் ஓவியர் மாற்குவின் நினைவு தினம்.. இலங்கைத் தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தின் பிதாமகன் என்று இவரைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.இவர் நம்மை விட்டுப் பிரிந்து15 வருடங்கள் கடந்துபோயின.
தமிழகத்தில் எந்த ஓவியரும் இதுவரை என்னிடம் இலங்கை ஓவியர் மாற்குவைப் பற்றி பேசியதில்லை. தன்னைத்தானே விளம்பரப்படுத்திக்கொள்ளாத உன்னதமானதொரு கலைஞர்.
இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரைக் கெளரவிக்கும் நோக்குடன் நண்பர்கள் அ.யேசுராசா, Dr. க. சுகுமார், பத்மநாப ஐயர் ஆகியோரின் பெருமுயற்சியால் `தேடலும் படைப்புலகமும்` என்னும் ஓர் அரிய ஆவணநூலை
வெளிக்கொண ர்ந்தார்கள். இவருடனான நேர்காணல், சில ஓவியங்கள், இவரது காலத்தில் வாழ்ந்த சில ஓவியர்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. ஓவியர் மாற்கு பற்றிய ஓரளவு தகவல்களையாவது நாம் அறிந்து கொள்வதற்கும் இனி வரும் சந்ததியினருக்கு விட்டுச்செல்லவும் இந்த நூல் ஒன்றுதான் தற்போது கைவசம் உள்ளது. இந்த நூலை noolaham.org இல் யாவரும் படிக்கலாம்.
``என் மாணவர்களாலேயே நான் அறியப் படுவேன்`` என்று ஒரு நேர்காணலில் இவர் கூறியதுபோலவே, உலகெங்கிலும் பரந்து வாழும் இவருடைய மாணவர்களில் முதன்மையானவர்களாக கிருஷ்ண ராஜா,அருந்ததி, வாசுகி,கருணா, சுகுணா, ஜெயந்தன் இருக்கிறார்கள். இவர் பற்றிய ஆவணப்படமொன்றை சுவிட்சர்லாந்தில் வாழும் ஜெயந்தன் தயாரித்துவருவதாகக் கேள்விப்பட்டேன்.ஆனால் வெளிவந்தததா எனபதை ஈழத்து நண்பர்கள் எனக்குத் தெரிவிக்கலாம்.
இதே போல் “யாழ்ப்பாணத்து ஓவியர்கள்” என்ற புத்தகம் இலங்கை ஓவியர்கள் பற்றிய மிக அருமையான அறிமுகம். இந்த புத்தகத்தை புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நினைத்தால் மிகச் சுலபமாக மறுபதிப்பு கொண்டு வரலாம்...அல்லது இன்னும் விரிவாக எழுதி வெளியிடலாம். ...ஏன் இன்னும் செய்யவில்லை? தமிழை முத்தமிழ் என்று கொண்டாடியவர்கள் ஓவியத் தமிழ் என்ற ஒன்றை இணைக்காத காரணத்தால் தமிழர்களின் ஓவியம் என்ற ஒன்று இன்று வேரில் பழுத்த பலாவாக கோரிக்கையற்று கிடக்கிறது....மாற்கு பற்றிய ஒரு Retrospective showவை தமிழகத்தில் ஓவியர்கள் அனைவரும் இணைந்து செய்வார்களானால் மிகச் சிறப்பாக இருக்கும்...செய்வார்களா?
விரைவில் " தேடலும் படைப்புலகமும் " நூலின் மறு பதிப்பை என்னுடைய Indran Yali publication இல் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
எழுத்தாக்கம் :-Antonyfernando Jeniefar