லண்டனில் தமிழர்களிடம் ரூ.8 கோடிக்கும் மேல் மோசடி! ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இலங்கைத் தம்பதிக்கு சிறைத்தண்டனை!

லண்டனில் தமிழர்களிடம் ரூ.8 கோடிக்கும் மேல் மோசடி! ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இலங்கைத் தம்பதிக்கு சிறைத்தண்டனை!

பிரித்தானியாவில் தமிழர்கள் உள்ளிட்ட பலரிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஹெர்ட்போர்ட்ஷயர் பகுதியில் வசித்து வந்த 52 வயதுடைய மகேந்திர சர்வேந்திரா மற்றும் அவரது 51 வயதுடைய மனைவி மிர்னாளினி ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட மோசடி தொடர்பான விசாரணைகளைத் தீவிர மோசடி மற்றும் சைபர் குற்றப்பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து, செயிண்ட் அல்பான்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

230,000 பவுண்டுகள் பண மோசடி!

கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில், குறித்த தம்பதியினர் தங்களுடைய அயலவர்களை அணுகி வீடுகளுக்கான மீள் அடமான வசதிகளை ஏற்பாடு செய்து தருவதாகவும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக இலாபம் பெற்றுத்தர முடியும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பலர் அவர்களிடம் பெருந்தொகையான பணத்தை வழங்கியுள்ளனர்.

இவ்வாறு பலரிடம் இருந்து சுமார் 230,000 பிரித்தானிய பவுண்டுகள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கை ரூபாய் மதிப்பில் இது சுமார் 9 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்; மாற்று விகிதத்தைப் பொறுத்து தொகை மாறுபடும்.

கணவருக்கு 6 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை!

இந்த நிதி மோசடி தொடர்பில் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்ட மகேந்திர சர்வேந்திராவுக்கு 6 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவரது மனைவி மிர்னாளினிக்கு 3 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மோசடி மூலம் பெற்றுக்கொண்ட பணத்தைக் கொண்டு குறித்த தம்பதியினர் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது அவர்களுடைய வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களில் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை குற்றவியல் வருமான மீட்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் முதலீடு மற்றும் நிதி உதவி என்ற பெயரில் அறிமுகமில்லாத நபர்களிடம் பணம் வழங்கும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.