நிலவில் மனிதக் குடியேற்றம்: நாம் நினைப்பதைவிட மிக வேகமாகத் தண்ணீர் தீர்ந்துவிடுமா?
ஆரம்பத்தில் நிலவில் சுமார் ஒரு பில்லியன் டன் தண்ணீர் ஐஸ் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், புதிய ஆய்வுகள் அந்த அளவு மிகவும் குறைவு என்று கூறுகின்றன.
நிலவில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகள்... அங்கு ஆயிரக்கணக்கானோர் வசிக்கும் நகரங்கள்... தொழிற்சாலைகள், சூரிய மின்சார நிலையங்கள் என ஒரு புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்தக் கனவுக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது தண்ணீர். ஆனால், நிலவின் துருவப் பகுதிகளில் நிரந்தரமாக இருளில் இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் பனிக்கட்டியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், அந்தக் கனவுக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆய்வுகள் அந்த நம்பிக்கைக்கு ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன.
நிலவில் இருக்கும் தண்ணீர், அங்கு உருவாகும் நகரங்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குப் போதுமானதாக இருக்கும்?
பல பில்லியன் ஆண்டுகளாக மறைந்திருக்கும் பனிக்கட்டி
நிலவு உருவான ஆரம்ப காலத்தில் விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் அதன் மீது தொடர்ந்து மோதின. இதனால் உருவான பள்ளங்கள்தான் இன்று நிலவின் மேற்பரப்பில் காணப்படுகின்றன.
நிலவின் துருவங்களுக்கு அருகே இருக்கும் சில பள்ளங்களின் அடிப்பகுதிகளில் சூரிய ஒளியே படுவதில்லை. கிட்டத்தட்ட 4 பில்லியன் ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் நிரந்தர இருளில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வெப்பநிலை சுமார் மைனஸ் 163 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக இருக்கலாம்.
இவ்வளவு கடுமையான குளிரில் தண்ணீர் ஆவியாகி விண்வெளிக்குச் சென்றுவிடாமல், பனிக்கட்டியாக பல பில்லியன் ஆண்டுகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதனால்தான் நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள இந்தப் பள்ளங்கள் எதிர்கால மனித குடியிருப்புகளுக்கு முக்கிய இடங்களாகப் பார்க்கப்படுகின்றன.
ஒரு பில்லியன் டன் தண்ணீர் இருக்கிறதா?
2013-ம் ஆண்டு முதலே நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருப்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும்.
முந்தைய கணக்கீடுகளில், அங்கு சுமார் 100 கோடி டன் தண்ணீர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது. ஆனால், புதிய மதிப்பீடுகள் இந்த அளவு மிகவும் குறைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. இதுதான் நிலவில் எதிர்காலத்தில் நகரங்களை உருவாக்குவது தொடர்பாக விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.
மின்சாரத்துக்கு பெரிய பிரச்சினை இருக்காது?
நிலவில் மனிதர்கள் வாழ வேண்டுமென்றால் மின்சாரம் அவசியம்.
இங்கு ஒரு நல்ல செய்தியும் இருக்கிறது.
நிலவின் சில பள்ளங்களின் அடிப்பகுதிகளில் சூரிய ஒளி நிரந்தரமாகப் படுவதில்லை என்றாலும், அவற்றைச் சுற்றியுள்ள உயரமான விளிம்புப் பகுதிகளில் ஆண்டின் பெரும்பாலான காலங்களில் சூரிய ஒளி கிடைக்கிறது.
இந்த இடங்களில் பெரிய சூரிய மின்தகடுகளை அமைத்தால், சுமார் 3 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர்.
மேலும், நிலவில் சிலிகான் அதிகமாகக் கிடைக்கிறது. எனவே எதிர்காலத்தில் பூமியிலிருந்து சூரிய மின்தகடுகளை எடுத்துச் செல்லாமல், நிலவிலேயே அவற்றை தயாரிக்கும் வாய்ப்பும் இருக்கலாம்.
அப்படி நடந்தால், நிலவில் அதிக மின்சாரம் தேவைப்படும் தொழில்களைக்கூட உருவாக்க முடியும். உதாரணமாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த தரவு மையங்களையும் அங்கு அமைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது, நிலவில் ஒரு புதிய பொருளாதார உலகமே உருவாகும் வாய்ப்பு உள்ளது.
ஆனால்... தண்ணீர் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது?
இங்குதான் மிகப்பெரிய சிக்கல் தொடங்குகிறது.
மின்சாரம் கிடைத்தாலும் தண்ணீர் இல்லாமல் நிலவில் ஒரு நகரம் உயிர்வாழ முடியாது.
ஆய்வாளர்களின் கணக்குப்படி, ஒரு கோடி அல்ல... 10 லட்சம் பேர் வசிக்கும் மிகப்பெரிய நிலவு குடியிருப்பு உருவானதாக வைத்துக்கொள்வோம்.
அங்கு தொடக்கத்தில் தண்ணீர் அளவு மிக தாராளமாக 100 கோடி டன் இருந்தாலும், தண்ணீரை மறுசுழற்சி செய்யாமல் பயன்படுத்தினால் சில ஆண்டுகளிலேயே அது தீர்ந்துவிடும்.
தண்ணீரை 98 சதவீதம் வரை மறுசுழற்சி செய்தாலும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும் அளவிலான திறன் இருந்தாலும், அந்தத் தண்ணீர் 100 ஆண்டுகளுக்கும் சற்று அதிகமான காலத்திலேயே தீர்ந்துவிடும் என மதிப்பிடப்படுகிறது.
இதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், நிலவில் உண்மையில் இருக்கும் தண்ணீர் முந்தைய மதிப்பீட்டை விட 30 மடங்கு குறைவாக இருந்தால், இந்தக் கால அளவும் அதே அளவுக்கு குறைந்துவிடும்.
அப்படியானால் சிறிய நகரங்கள்?
நிலவில் உடனடியாக 10 லட்சம் பேர் குடியேறுவது சாத்தியமில்லை.
ஆனால், ஆரம்ப கட்டத்தில் 1,000 பேர் அல்லது 10,000 பேர் மட்டுமே வசிக்கும் குடியிருப்புகளை உருவாக்கினால் நிலைமை மாறலாம்.
குறைந்த மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள், கிடைக்கும் தண்ணீரை மிகவும் திறமையாகப் பயன்படுத்தினால் பல நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலாக நிலைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தீர்வு இருக்கிறதா?
நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழ வேண்டும் என்றால், தண்ணீர் பயன்பாட்டை கடுமையாகக் குறைக்க வேண்டும்.
அதற்கு பல வழிகள் இருக்கலாம்.
தண்ணீரை இன்னும் அதிக திறனுடன் மறுசுழற்சி செய்வது, குறைந்த அளவு தண்ணீர் தேவைப்படும் விவசாய முறைகளைப் பயன்படுத்துவது, குறிப்பாக செங்குத்து விவசாயத்தை மேற்கொள்வது போன்றவை உதவலாம்.
மேலும், எதிர்காலத்தில் சிறுகோள்களில் இருந்து தண்ணீரை நிலவுக்கு கொண்டு வருவதும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
ஆனால், இதைவிட முக்கியமான வழி ஒன்று இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நிலவின் மேற்பரப்புக்கு அடியில் இன்னும் அதிக அளவு தண்ணீர் மறைந்திருக்கிறதா என்பதைக் கண்டுபிடிப்பது!
இன்னும் பல மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருக்குமா?
தற்போது நிலவில் மேற்கொள்ளப்படும் பல ஆய்வுகள் மேற்பரப்பிலிருந்து சில மீட்டர் ஆழம் வரையிலான பகுதிகளையே அதிகமாக ஆய்வு செய்கின்றன.
ஆனால் நிலவின் தளர்வான மேற்பரப்பு மண் மற்றும் பாறைத் துகள்கள் பல பத்துகள் மீட்டர் ஆழம் வரை இருக்கலாம். அதனால், இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஆழமான பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பை முழுமையாக நிராகரிக்க முடியாது.
நிலவில் நிரந்தரமாக மனிதர்கள் வாழும் நகரங்கள் உருவாக வேண்டும் என்ற கனவு ஒருநாள் நனவாகலாம். ஆனால் அந்தக் கனவுக்கான முதல் கேள்வி, "எவ்வளவு மின்சாரம் கிடைக்கும்?" என்பது அல்ல.
அதற்கு முன்பாகவே கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்:
"நிலவில் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் இருக்கிறதா?"
அதற்கான பதிலை கண்டுபிடிப்பதே, நிலவில் மனிதர்கள் அமைக்கப் போகும் முதல் நகரத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடும்