செவ்வாய்க்கும் பூமிக்கும் 'ஹை-ஸ்பீட்' இணைப்பு: ஜெஃப் பெசோஸின் புளூ ஆரிஜினுடன் நாசா மெகா ஒப்பந்தம்

செவ்வாய்க்கும் பூமிக்கும் 'ஹை-ஸ்பீட்' இணைப்பு: ஜெஃப் பெசோஸின் புளூ ஆரிஜினுடன் நாசா மெகா ஒப்பந்தம்

செவ்வாய் கிரகத்திற்கும் பூமிக்கும் இடையேயான தகவல் தொடர்பை வலுப்படுத்த, ஜெஃப் பெசோஸின் 'புளூ ஆரிஜின்' நிறுவனத்துடன் நாசா 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

சிவப்பு கிரகமான செவ்வாயில் இருந்து பூமிக்கு தகவல்களைப் பரிமாற அதிநவீன தகவல் தொடர்பு பாலம் ஒன்றை அமைக்க நாசா தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்த பிரம்மாண்ட திட்டத்திற்காக, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான 'புளூ ஆரிஜின்' (Blue Origin) வசம் ஒரு மெகா ஒப்பந்தத்தை நாசா ஒப்படைத்துள்ளது.

'மார்ஸ் டெலிகம்யூனிகேஷன்ஸ் நெட்வொர்க்' (Mars Telecommunications Network - MTN) என்ற இந்தத் திட்டத்தின் கீழ் புதிய விண்கலத்தை உருவாக்க புளூ ஆரிஜினுக்கு 700 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,800 கோடி மேல்) மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பின்னல் 2030-ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் முழுமையாக செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக செவ்வாய்க்கு அனுப்பப்படும் விண்கலங்கள் அங்கே இறங்கி மண், பாறைகளை ஆராய்வது வழக்கம். ஆனால், இந்த புதிய விண்கலம் எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நேரடியாகச் செய்யப்போவதில்லை.

மாறாக, விண்வெளியில் நிலைநிறுத்தப்படும் சக்திவாய்ந்த 'தகவல் தொடர்பு மையமாக' (Communications Hub) மட்டுமே இயங்கும். செவ்வாயின் தரைப்பரப்பில் ஆய்வு செய்யும் ரோவர்கள் மற்றும் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் பிற விண்கலங்கள் அனுப்பும் அறிவியல் தகவல்கள், அதிநவீன புகைப்படங்கள், நேவிகேஷன் தகவல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் பெற்று, பூமிக்கு தடையின்றி அனுப்பி வைப்பதே இதன் முதன்மையான வேலை.

செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்குத் தகவல்களை அனுப்ப ஏற்கனவே விண்கலங்கள் செயல்பட்டு வருகின்றன. 2001-ல் ஏவப்பட்ட 'மார்ஸ் ஒடிஸி' மற்றும் 2005-ல் விண்ணில் பாய்ந்த 'மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர்' ஆகியவை தங்கள் அறிவியல் பணிகளோடு சேர்த்து இந்தத் தகவல் தொடர்பு வேலையையும் செய்து வருகின்றன. இதுதவிர, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' மற்றும் 'டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர்' ஆகியவையும் உதவி புரிந்து வருகின்றன. இருப்பினும், இந்த விண்கலங்கள் அனைத்தும் பல ஆண்டுகளைக் கடந்து மிகவும் பழமையாகிவிட்டன. அதே நேரத்தில், எதிர்காலத்தில் செவ்வாயை நோக்கிப் புறப்பட உள்ள விண்கலங்களின் எண்ணிக்கையும், அவற்றின் ஆய்வுத் தேவைகளும் பன்மடங்கு அதிகரிக்கவுள்ளன.

அதிநவீன ரோபோக்கள் மற்றும் மனிதர்களை நேரடியாகச் செவ்வாய்க்கு அனுப்பும் பெரும் கனவுத் திட்டங்களை நாசா கையில் எடுத்துள்ளது. எதிர்காலத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் பூமியை நோக்கிப் பாய வேண்டியிருக்கும். எனவே, அறிவியல் ஆய்வுகளுக்கு நேரத்தை ஒதுக்காமல், முழுக்க முழுக்கத் தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே செயல்படும் ஒரு பிரத்யேக அமைப்பை உருவாக்கவே நாசா இந்த முடிவை எடுத்துள்ளது.

புளூ ஆரிஜின் நிறுவனம் தனது அதிநவீன 'புளூ ரிங்' (Blue Ring) விண்கலக் கட்டமைப்பை மையமாக வைத்து இந்தச் செவ்வாய் தகவல் தொடர்பு விண்கலத்தை உருவாக்கவுள்ளது. விண்வெளியில் அதிக சுமைகளைத் தாங்கிச் செல்லவும், சூரிய மின்சார உந்துவிசை மற்றும் ரசாயன உந்துவிசை ஆகிய இரண்டையும் பயன்படுத்தி விண்வெளியில் பயணிக்கவும் இந்த பிளாட்பார்ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ஹன்ட்ஸ்வில்லி தயாரிப்பு மையத்தில் இந்த விண்கலத்தை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. விண்கலத்தைக் கட்டமைப்பது, இணைப்பது, ராக்கெட்டில் ஏற்றிச் செலுத்துவது மற்றும் விண்வெளியில் இயக்குவது என அனைத்துப் பொறுப்புகளையும் புளூ ஆரிஜின் நிறுவனமே நேரடியாகக் கவனிக்கவுள்ளது.

ஒப்பந்த விதிகளின்படி, இந்த விண்கலத்தை 2028 டிசம்பர் 31-க்குள் நாசாவிடம் புளூ ஆரிஜின் ஒப்படைக்க வேண்டும். அதன்பின், 2030-ல் இது செவ்வாயில் பயன்பாட்டிற்கு வரும். எதிர்காலத்தில் அங்கு கால்பதிக்கப் போகும் விண்வெளி வீரர்களுக்கும் விண்கலங்களுக்கும் பூமியுடன் ஒரு வலுவான தொடர்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே நாசாவின் நீண்டகாலத் திட்டம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் குறித்துப் பேசிய புளூ ஆரிஜின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் லிம்ப், சுருக்கமாக ஆனால் அழுத்தமாக, நாங்கள் செவ்வாய்க்குச் செல்கிறோம் என்று கூறியுள்ளார்.