376 கி.மீ ஆழத்தில் வெடித்த பூமி: இந்தோனேசியாவின் விசித்திர நிலநடுக்கம் உணர்த்துவது என்ன?
ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) இதனை 6.2 ரிக்டர் அளவுகோல் என்று பதிவிட்டுள்ளது. உடனடி உயிர் சேதமோ பொருட்சேதமோ பதிவாகவில்லை; எனினும் ஜவா, மேற்கு ஜவா மற்றும் சுமத்ரா பகுதிகளிலும் நடுக்கம் உணரப்பட்டது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவு அருகே சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அந்நாட்டில் மட்டுமல்லாமல் புவியியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்புக்கு அருகில் ஏற்படவில்லை. பூமிக்கு அடியில் சுமார் 376 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 12-ம் தேதி அதிகாலை 2.53 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக இந்தோனேசியாவின் வானிலை, பருவநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜகார்த்தாவிலிருந்து சுமார் 49 கி.மீ வடமேற்கே கடல் பகுதியில் இதன் மையப்புள்ளி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கணக்குப்படி, நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 6.2 ஆகும்.
இதுவரை இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இருப்பினும், ஜகார்த்தா, மேற்கு ஜாவாவின் பல பகுதிகள் மட்டுமின்றி சுமத்ராவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
376 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்... எப்படி ஏற்பட்டது?
இந்த நிலநடுக்கத்தைப் புரிந்துகொள்ள அதன் ஆழம்தான் முக்கியமான காரணியாக உள்ளது.
பொதுவாக பூமியின் மேல்பகுதியான மேலோடு பகுதியில் தான் பெரும்பாலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சில நிலநடுக்கங்கள் பூமிக்கு அடியில் பல நூறு கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்படுகின்றன.
இவ்வகை நிலநடுக்கங்கள் ஆழ்நிலை நிலநடுக்கங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்தோனேசியா இதுபோன்ற நிலநடுக்கங்களுக்கு அதிக வாய்ப்புள்ள பகுதியாகும். ஏனெனில் பல கண்டத்தட்டுகள் சந்திக்கும் பகுதியில் அந்த நாடு அமைந்துள்ளது.
குறிப்பாக, ஜாவாவின் தெற்குப் பகுதியில் உள்ள இந்தோ-ஆஸ்திரேலிய கண்டத்தட்டு, யூரேசிய கண்டத்தட்டுக்கு அடியில் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்த செயல்முறை ‘சப்டக்ஷன்’ எனப்படுகிறது.
ஒரு கண்டத்தட்டு மற்றொரு கண்டத்தட்டுக்கு அடியில் செல்லும்போது, அதற்குள் மிகப்பெரிய அழுத்தம் உருவாகிறது. ஒரு கட்டத்தில் பாறைகள் அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் உடையலாம் அல்லது திடீரென நகரலாம்.
அப்போது சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் நில அதிர்வு அலைகளாக வெளியேறுகிறது. ஜாவா அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கும் இதுவே முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஏன் பெரிய சேதம் ஏற்படவில்லை?
நிலநடுக்கம் ஏற்பட்ட ஆழம், அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானது.
பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், அதன் அதிர்வு ஆற்றல் குறுகிய தூரத்திலேயே மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சென்றடையும். இதனால் கட்டடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
ஆனால் ஜாவா அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் 376 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.
இதனால் நில அதிர்வு அலைகள் பூமியின் மேற்பரப்பை அடைவதற்கு மிகப்பெரிய அளவிலான பாறைப் பகுதிகளைக் கடந்து வர வேண்டியிருந்தது. அந்தப் பயணத்தின்போது ஆற்றல் பரந்த பகுதியில் பரவுகிறது.
இதன் காரணமாக, இதே அளவு கொண்ட ஒரு ஆழம் குறைவான நிலநடுக்கத்துடன் ஒப்பிடும்போது, மேற்பரப்பில் ஏற்படும் அதிர்வின் தன்மை வேறுபடலாம்.
அதேநேரம், ஆழமான நிலநடுக்கம் என்பதால் அது ஆபத்தற்றது என்று அர்த்தமில்லை. நிலநடுக்கத்தின் அளவு மட்டுமின்றி, அதன் ஆழம், மையப்புள்ளிக்கு அருகில் உள்ள மக்கள் தொகை மற்றும் கட்டடங்களின் தன்மை உள்ளிட்ட பல காரணிகளும் சேதத்தை தீர்மானிக்கின்றன.
சுனாமி ஏற்படும் அபாயம் இருந்ததா?
இந்த நிலநடுக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சம், சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது என்பதாகும்.
கடலுக்கு அடியில் மிகவும் குறைந்த ஆழத்தில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் கடலடித் தரையை திடீரென மேலே அல்லது கீழே நகர்த்தும்போது சுனாமி உருவாகலாம்.
ஆனால் 376 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடலடித் தரைக்கு மிகவும் கீழே உள்ளது. எனவே கடலடித் தரையை திடீரெனப் பெரிய அளவில் நகர்த்தி சுனாமியை உருவாக்கும் சூழல் இங்கு ஏற்பட வாய்ப்பு குறைவு.
இந்த நிலநடுக்கம் சொல்லும் முக்கிய விஷயம் என்ன?
இந்தோனேசியா ஏன் உலகின் அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது.
ஒரே நாட்டில் ஏற்படும் அனைத்து நிலநடுக்கங்களும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது. நிலநடுக்கம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதுடன், அது எவ்வளவு ஆழத்தில் ஏற்பட்டது என்பதும் மிக முக்கியம்.
ஜாவா அருகே 376 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்புக்கு அடியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் கண்டத்தட்டுகளின் மிகப்பெரிய இயக்கத்துக்கு ஒரு சாளரத்தைத் திறந்துள்ளது.