யாழில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைகள்: சுற்றிவளைத்து கைது செய்த கடற்படை
யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் இறங்குதுறையில் இந்திய பிரஜைகள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீசா நிபந்தனைகளை மீறிய மற்றும் வீசா அனுமதிப்பத்திரம் இல்லாமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இறங்குதுறையில் தங்கியிருந்த சந்தேகத்திற்கிடமான இந்நபர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
அவ் வேளையில், அவர்கள் இந்திய பிரஜைகள் என்று உறுதி செய்யப்பட்டதோடு, அவர்கள் நெடுந்தீவில் முன்னெடுக்கப்படும் கட்டுமானத் தொழிலுக்காக இவ்வாறு குறிகட்டுவான் இறங்குதுறையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களின் கடவுச்சீட்டுகளை பரிசோதித்தபோது, அவை காலாவதியாகியிருந்த தோடு, அவர்களில் சிலர் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து, இவ்வாறு வேலைவாய்ப்பில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீசா அனுமதிப்பத்திரம் காலாவதியானமை, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமை காரணமாக கைது செய்யப்பட்ட இச்சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குறிகட்டுவான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.