'சிறி ' மென்பொருளால் ஆப்பிள் நிறுவனத்திற்கு நேர்த்த கதி!
சிறி (Siri) குரல் உதவி மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) இற்றைப்படுத்தல்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பங்குதாரர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பீட்டர் லேண்ட்ஷெஃப்ட் என்பவரால் கலிபோர்னியாவின் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் (WWDC) ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்த செயற்கை நுண்ணறிவு அம்சங்களை, அதே நாளில் வெளியிடப்பட்ட புதிய "iPhone" கைபேசிகளுடன் வழங்கத் தவறியமையே இந்த வழக்கிற்கு அடிப்படையாக அமைந்தது.
நிறுவனம் அந்த அம்சங்கள் குறித்து பெருமளவில் விளம்பரங்களை மேற்கொண்ட போதிலும், கைபேசிகள் சந்தைக்கு வெளியிடப்பட்ட போது அந்த அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்தத் தாமதத்தினால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்களுக்கு பங்குதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பின்னர் 2025 ஆம் ஆண்டில், சிறியின் செயற்கை நுண்ணறிவு நவீனமயமாக்கல் இந்த ஆண்டு வரை நடைபெறாது என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள வருடாந்த மென்பொருள் உருவாக்குநர்கள் மாநாட்டில் இந்த புதிய அம்சங்கள் காட்சிப்படுத்தப்படும் என்பதை நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த இணக்கப்பாட்டின் போது ஆப்பிள் நிறுவனம் தனது தரப்பில் தவறு நடந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன், இந்த உடன்படிக்கைக்கு இன்னும் நீதிபதியின் அங்கீகாரம் தேவைப்படுகிறது.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:
"கூடுதல் அம்சங்கள் இரண்டை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள ஆப்பிள் நிறுவனம் உடன்பாட்டிற்கு வந்துள்ளது. எமது பயனர்களுக்கு மிகவும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எமது கவனத்தைத் தொடர்ந்தும் செலுத்துவதற்காகவே இப்பிரச்சினைக்குத் தீர்வுகண்டோம்."
2024 ஆம் ஆண்டு 'Apple Intelligence' அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தாம் மேலும் பல செயற்கை நுண்ணறிவு அம்சங்களை வெளியிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.