ரோபோக்களுக்கும் டிரஸ் முக்கியம்பா... ஃபேஷன் ஷோவில் மனிதர்களுடன் ஜோடியாக நடைபோட்ட ரோபோக்கள்!

ரோபோக்களுக்கும் டிரஸ் முக்கியம்பா... ஃபேஷன் ஷோவில் மனிதர்களுடன் ஜோடியாக நடைபோட்ட ரோபோக்கள்!

தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த மேக்33: பிசிகல் ஏ.ஐ ஃபேஷன் ஷோ என்ற நிகழ்வில், ஏ.ஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் மனித உருவ ரோபோக்கள், மனித மாடல்களுக்கு இணையாக ரன்வேயில் ஆடைகளை அணிந்து வலம் வந்து அசத்தின.

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க... நீங்க ஃபேஷன் ஷோவுக்குப் போறீங்க. அங்க அழகான மாடல்கள் புதுப்புது ஆடைகளை போட்டுக் கிட்டு ஸ்டைலா நடந்து வர்றாங்க. அவங்க கூடவே அவங்க போட்டிருக்கிற அதே டிசைனர் டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு, தலையில கவ்பாய் தொப்பியோட ரோபோக்களும் ஜோடியா நடந்து வந்தா எப்படி இருக்கும்? கேட்கவே 'சைன்ஸ் ஃபிக்சன்' படம் மாதிரி இருக்குல்ல? தென் கொரியாவின் சியோல் நகரில் இது நிஜமாகவே நடந்திருக்கு.

மேக்33: பிசிகல் ஏ.ஐ ஃபேஷன் ஷோ (Mach33: Physical AI Fashion Show) என்ற பெயரில் நடந்த இந்த எதிர்கால ஃபேஷன் திருவிழா, இப்போ சோசியல் மீடியாவில் செம வைரல். இந்த வினோதமான ஐடியாவுக்குப் பின்னாடி இருக்கிற கேலக்ஸி கார்ப்பரேஷன் நிறுவனத்தோட சிஇஓ சோய் யாங்-ஹோ என்ன சொல்றார் தெரியுமா? நாம ரோபோக்களை பத்தி யோசிக்கும்போது மெஷினா மட்டும் பார்க்கிறோம். ஆனா, எதிர்காலத்தில் அதுங்க நம்ம கூடவே வாழப்போகுது. அப்போ மனிதர்களைப் போலவே ரோபோக்களுக்கும் ஆடைகள் அணிய வேண்டிய தேவை இருக்குல்ல. அதை யோசிச்சுதான் இந்த ஷோவை நடத்தினோம். அதுமட்டும் இல்லங்க, ஒவ்வொரு மனிதனும் எப்படி தனித்துவமானவங்களோ, அதே மாதிரி ஒவ்வொரு ரோபோவும் தனித்தன்மை வாய்ந்ததா இருக்கணும்னு அவங்களுக்காகப் பார்த்துப் பார்த்து ஸ்பெஷலா ஆடைகளை டிசைன் பண்ணியிருக்காங்க.

ரன்வேயில் மனித மாடல்களும், ஏ.ஐ ரோபோக்களும் 'மேட்சிங் மேட்சிங்' ஆடைகளை அணிந்து, ஒரே மாதிரியான ஸ்டெப்களைப் போட்டு நடந்து வந்த காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ரோபோக்களின் இரும்பு எலும்புக்கூடு உடலமைப்புக்கு ஏத்த மாதிரி ஆடைகள் செதுக்கியிருந்தாங்க டிசைனர்கள். 1970-களின் ரெட்ரோ பாணி ஆடைகள், பட்டு உடைகள், மினுமினுக்கும் விண்வெளி காலத்து மெட்டாலிக் ஜாக்கெட்டுகள் என ரன்வேயே சும்மா அண்டார்டிகா ரேஞ்சுக்குக் குளிர்ந்து போயிருந்தது.

இதுவரைக்கும் நாம ரோபோக்களை கார் தயாரிக்கிற ஃபேக்டரியிலயோ அல்லது ஏதோ லேப்-லயோதான் பார்த்திருப்போம். ஆனா, இனிமேல் அதுங்க பொழுதுபோக்கு, கலை, கலாச்சாரம்னு நம்ம வாழ்க்கையோட எல்லா பக்கமும் வரப்போகுது அப்படிங்கிறதை இந்த ஷோ ஆணித் தரமா காட்டியிருக்கு. நாமும் ரோபோக்களும் ஒன்னா வாழ முடியுமா? இந்த ஃபேஷன் ஷோ சும்மா பொழுதுபோக்குக்காக மட்டும் நடத்தப்படல. எதிர்காலத்துல மனிதர்களும் ரோபோக்களும் எப்படி ஒன்னா, சண்டை இல்லாம கூடி வாழப் போறோம்? அப்படிங்கிற ஒரு பெரிய கேள்வியையும், அதுக்கான அழகான பதிலையும் இந்த ஷோ நமக்குக் காட்டியிருக்கு. சீக்கிரமே உங்க வீட்டுப் பக்கத்து துணிக்கடையில "ரோபோக்களுக்கான பிரத்யேக ஆடைகள் ஆஃபரில் கிடைக்கின்றன" எனப் போர்டு பார்த்தால் ஆச்சரியப்படாதீங்க..