சீறிப்பாய்ந்த டிராகன் படகுகள்: துடுப்பு போட்டு அசத்திய ரோபோக்கள்; சீனா நடத்திய விசித்திர சாதனை

சீறிப்பாய்ந்த டிராகன் படகுகள்: துடுப்பு போட்டு அசத்திய ரோபோக்கள்; சீனா நடத்திய விசித்திர சாதனை

சீனாவின் 2,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியமிக்க, யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 'டிராகன் படகுத் திருவிழாவில்', முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மனிதவடிவ ரோபோக்கள் துடுப்பு போட்டுப் பங்கேற்றுள்ளன.

2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பாரம்பரியம், அசாத்திய கூட்டு உழைப்பு, மேள தாளத்திற்கு ஏற்ப சீறிப்பாயும் வேகம்... இதுதான் சீனாவின் புகழ்பெற்ற "டிராகன் படகுத் திருவிழா". இந்த ஆண்டு நடந்த திருவிழாவில், வழக்கமான துடுப்புக்காரர்களுடன் சேர்ந்து யாரும் எதிர்பாராத புதுக் குழு களமிறங்கியது. வேறு யாருமல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் அதிநவீன மனிதவடிவ ரோபோக்கள்.

தண்ணீரைக் கிழித்துக்கொண்டு படகுகள் முன்னேறியபோது, மனிதர்களுக்கு இணையாக ரோபோக்களும் துடுப்பு போட்டு அசத்திய காட்சி, ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பழமையான கலாச்சாரப் பாரம்பரியத்துடன், அதிநவீன ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் கைகோர்த்த இந்த விசித்திரக் காட்சி, ஆய்வகங்களைத் தாண்டி ரோபோக்கள் எப்படி நம் பொது வாழ்க்கைக்குள் நுழைந்து வருகின்றன என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

'யுனெஸ்கோ' அங்கீகாரமும்... படகோட்டிகளின் சவாலும்

'டுவான்வு திருவிழா' என்றும் அழைக்கப்படும் இத்திருவிழா, எவ்வளவு முக்கியமானது என்றால், கடந்த 2009 ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ (UNESCO) இதனை 'மனிதகுலத்தின் அழியாத கலாச்சார பாரம்பரியப் பட்டியலில்' சேர்த்துள்ளது. இந்த டிராகன் படகுப் பந்தயத்தில் ஜெயிப்பது சாதாரண விஷயமல்ல. படகில் இருக்கும் டஜன் கணக்கான மனிதர்களும் தங்களது உடல் சமநிலையைக் கட்டுக்கோப்பாக வைத்து, மேள தாளத்தின் 'ரிதத்திற்கு' ஏற்ப, ஒரே மில்லிசெகண்ட் கூட மாறாமல் கச்சிதமாகத் துடுப்பு போட வேண்டும். மனிதர்களுக்கே சவாலான இந்தத் துல்லியம்தான், ரோபோட்டிக்ஸ் இன்ஜினியர்களுக்கும் சவாலாக அமைந்தது.

ரோபோக்களுக்கு ஏன் துடுப்புப் போட்டி அக்னிப்பரீட்சை?

ரோபோக்கள் நேராகத் தரையில் நடப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்க, தண்ணீரில் தள்ளாடும் ஒரு படகின் மீது அமர்ந்துகொண்டு, மற்றவர்களுடன் ஒத்திசைந்து (Synchronisation) துடுப்பு போடுவது என்பது ரோபோக்களுக்குப் மிகப் பெரிய சவால். இந்த ரோபோக்கள் தங்களது அசைவுகளைக் கட்டுப்படுத்த சென்சார்கள், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் அல்காரிதம்களை நம்பியிருக்கின்றன. படகில் லேசாகச் சமநிலை மாறினாலும், கணக்கீடுகளில் ஏற்படும் ஒரு சிறிய பிழை ஒட்டுமொத்த ரோபோவையும் நிலைதடுமாறச் செய்துவிடும்.

விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன?

இந்த ரோபோக்கள் ஏதோ கம்ப்யூட்டரில் முன்னரே செட் செய்யப்பட்ட அசைவுகளை மட்டும் செய்யவில்லை. நீரின் வேகம், படகின் அசைவு, மாறிக்கொண்டே இருக்கும் எடை ஆகியவற்றுக்கு ஏற்ப, அந்தந்த நொடியில் (Real-time) தங்களது பலத்தையும், வேகத்தையும் மாற்றித் துடுப்பு போட்டன. ரோபோக்களின் இந்த சுயசிந்தனைத் திறனைச் சோதிக்கவே விஞ்ஞானிகள் இந்தத் திருவிழாவைப் பயன்படுத்திக் கொண்டனர்.

உலக அளவில் 90% ரோபோக்கள் சீனாவில்தான்

கடந்த சில ஆண்டுகளாகவே சீனா இந்த ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தில் அசுர வேகம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்த வசந்தகால திருவிழாவில் (Spring Festival Gala) கூட, 'யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ்' போன்ற நிறுவனங்களின் ரோபோக்கள் மிகக் கடினமான தற்காப்புக் கலைகளை செய்து காட்டி உலகை மிரள வைத்தன. புள்ளிவிவரங்களின்படி, உலகெங்கும் அனுப்பப்படும் மனிதவடிவ ரோபோக்களில் 90% சீனாவில் இருந்தே உற்பத்தியாகின்றன. தங்களது ரோபோக்கள் வெறும் பொழுதுபோக்குக் கருவிகள் மட்டுமல்ல, அவை நிஜ உலகச் சூழலை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டன என்பதை நிரூபிக்கவே சீனா இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறது. இங்கு துடுப்பு போடவும், நடனமாடவும் பழகும் ரோபோக்கள், எதிர்காலத்தில் தொழிற்சாலைகள், பார்சல் டெலிவரி, பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவத் துறைகளில் மனிதர்களுக்குப் பெரிய உதவியாக மாறப்போகின்றன.

கலாச்சாரமும் தொழில்நுட்பமும் கைகோர்க்கும் எதிர்காலம்

டிராகன் படகுகள் எப்போதுமே 'ஒற்றுமையின்' அடையாளம். எல்லாரும் இணைந்து துடுப்பு போட்டால்தான் படகு வேகம் எடுக்கும். இன்று ரோபோக்களை உருவாக்குவதும் அப்படித்தான்; மெக்கானிக்ஸ், ஏ.ஐ (AI), சென்சார் எனப் பல துறைகள் ஒன்றுசேர்ந்தால்தான் ஒரு சிறந்த மனிதவடிவ ரோபோவை உருவாக்க முடியும். பண்டைய சீனாவின் பாரம்பரியப் படகில் ரோபோக்கள் அமர்ந்து துடுப்பு போட்ட விசித்திரக் காட்சி, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது நமது கலாச்சாரத்தை அழிப்பதற்கல்ல; மாறாக, அதோடு இணைந்து பயணிப்பதற்குத்தான்.