2026 கல்வி ஆண்டுக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம்
முதலாம் தரம் மற்றும் 6 ஆம் தரம் தவிர்த்து பாடசாலைகளின் ஏனைய தரங்களுக்கான முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (5) முதல் ஆரம்பமாகவுள்ளது.
அததுடன் பாடசாலை நடத்தும் நேரத்தை நீடிக்கும் தீர்மானம் 2026 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த விடயம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 6 இன் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி 2026 ஜனவரி மாதம் 21 ஆக இருப்பினும் புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 6 இற்கு பிற பாடசாலைகளிலிருந்து மாணவர்களை அனுமதிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகள் ஜனவரி 05 முதல் ஆரம்பிக்கும் வாரத்தினுள் மேற்கொள்ளப்படலாம் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தரம் ஒன்றிற்கான பிள்ளைகளை இனங்காணும் செயன்முறை இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், உத்தியோகபூர்வமாக கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகளின் தரம் 5 மற்றும் தரம் 6-13 வரையான தரங்களுக்காக 2026 ஆம் ஆண்டின் புதிய பாடசாலைத் தவணை ஆரம்பத்திலிருந்து நாளாந்தம் பாடசாலை முடிவடையும் நேரம் பி.ப. 2.00 மணி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், நாட்டில் கடந்த நாட்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த நிலைமையின் காரணமாக குறிப்பாக சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்புக்கும் அதேபோன்று போக்குவரத்து கட்டமைப்புக்கும் ஏற்பட்ட கடும் சேதங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலை நேரத்தை நீடிப்பதன் மூலம் அந்த மாகாணங்களின் பாடசாலை பிள்ளைகளுக்கும் ஏனைய தரப்பினருக்கும் பல சிரமங்கள் ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாடசாலை நடத்தும் நேரத்தை நீடிக்கும் தீர்மானம் 2026 ஆம் ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.