யாழில் சிக்கவுள்ள திடீர் பணக்காரர்கள்...! தொடரும் கைதுகள்: பொதுமக்களை நாடும் காவல்துறை
வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விடயத்தை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.
நேற்று (27) யாழ்ப்பாணம் தலைமை காவல்துறை காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 11 பேர் மட்டும் அல்லாமல் மேலும் பலருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பொதுமக்களிடம் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்கள், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், யாழில் (Jaffna) சட்டவிரோதமான சொத்து குவிப்புடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் கை துப்பாக்கிகள் இருக்கின்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்தார் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது தொலைபேசிக்கு இன்னொரு நபரிடம் இருந்து வாட்சப் மூலம் கைத் துப்பாக்கி ஒன்றின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்போது, கைத்துப்பாக்கியின் படத்தை தனக்கு அனுப்பியவர் பெயரை சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்