
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
மூன்றாம் நாடுகள் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,000 வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள தேக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நிதி அமைச்சகம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் பிரதிநிதிகள் இந்த வாரம், இது தொடர்பில் நீதிமன்றத்தில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பார்கள்.
முன்னதாக, குறைந்த வரிகளைச் செலுத்தும் முயற்சியில் எல்லை தாண்டிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்டநிலையில், குறித்த வாகனங்கள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக துறைமுகத்திலேயே உள்ளன.
இதனையடுத்து, குறித்த வாகனங்களை அவற்றின் சொந்த நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்வதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.
எனினும், அது உலக வர்த்தக அமைப்பு மற்றும் சுங்கத் திணைக்களத்துக்கு இடையிலான மதிப்பீட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக இருந்ததால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்தநிலையில், ஆறு இறக்குமதியாளர்கள் தங்கள் வாகனங்களை விடுவிக்க மாவட்ட நீதிமன்றத்திடம் நிவாரணம் கோரியுள்ளனர்.
இந்த ஆண்டு பெப்ரவரி 1 ஆம் முதலாம் திகதியன்று வாகன இறக்குமதி தளர்த்தப்பட்டதிலிருந்து, சுமார் 213,500 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் உந்துருளிகளும் அடங்கும்.
இந்த இறக்குமதிகளின் மொத்த மதிப்பு 314 பில்லியன் ரூபாய்கள் ஆகும். அதே நேரத்தில் வாகனங்களிலிருந்து கிடைத்த மொத்த வரி வருவாய் 446.84 பில்லியன்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.