
யாழ்ப்பாண தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில், திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது, சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் தெரிவித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டின் போது, நாட் திருப்பலிகள் மற்றும் ஞாயிறு திருப்பலிகளின் போது ஆலயத்திற்கு உள்ளே மாத்திரம் கேட்கும் படியாகவும், திருநாட் காலங்களில் ஆலய வளாகத்துக்குள் மட்டும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பல ஆலயங்களில் இந்த நடைமுறை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
எனினும் தற்போது சில தேவாலயங்களில் இந்த கட்டுப்பாடானது மீறப்பட்டுள்ளமையினால், இது சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் கூறியுள்ளார்.
ஆகவே, வீதிகளில் ஒலிபெருக்கி பாவிப்பதை முற்றாகத் தவிர்க்க உதவுமாறு யாழ்ப்பாண மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் கோரியுள்ளார்.