
தமிழர் பகுதியில் இளைஞன் கொடூரமாக வெட்டிக்கொலை - மோப்பநாய் உதவியுடன் விசாரணை
கொக்குத்தொடுவாய் (Kokkuthoduvai) களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (08) அதிகாலை கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையில் களப்பு கடற்கரையில் இருந்து 50 மீற்றர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராஜ் சுபராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று முன்தினம் (07) இரவு தொழிலுக்காகச் சென்ற இளைஞன், இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது, பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதிகாலை 2:30 மணியளவில், தொழிலுக்காக வந்த மற்றொரு நபர், குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டுள்ளார்.
அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம் என்பதால், யானை தாக்கியிருக்கலாம் என சந்தேகித்து, இளைஞனின் தந்தையையும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரையும் அழைத்து வந்து பார்த்தபோது, உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கொக்குளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையை ஆரம்பித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, சடலத்தை பார்வையிட்டு, மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரிக்கவும், கைரேகை பரிசோதனை மேற்கொள்ளவும், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
காவல்துறையினர் மற்றும் தடயவியல் குழுவினர் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இளைஞனின் மாமனார் விசாரணைக்காக காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இச்சம்பவத்தில், இவர் சிறந்த மரதன் ஓட்ட வீரராகவும், வடமாகாணத்தில் பல சாதனைகளைப் புரிந்தவராகவும் அறியப்படுகிறார்.