
தமிழர்கள் கசப்பான விடயங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் – சார்ள்ஸ்
தமிழர்கள் கசப்பான விடயங்களை மறந்து வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 8.55 மணியளவில் சார்ள்ஸ் நிர்மலநாதன் வாக்களித்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் இருப்பையும் அடையாளங்களையும் அழிப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழித்து சிங்கள பிரதிநிதித்துவத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே வன்னி மாவட்டத்தில் தமிழர்களின் தனித்துவத்தை இல்லாது செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்கள் கசப்பான விடயங்களை மறந்து வாக்களிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.