நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம்……!

நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம்……!

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இருப்பினும், அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, நாட்டில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது.

உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என நாங்கள் பெருமையாகக் கூறினாலும், அடுத்தடுத்து அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்றே கூறலாம்.

கடந்த நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, 225 உறுப்பினர்களில் 5% மட்டுமே பெண்கள், அதாவது 225 பேரில் பதின்மூன்று பேர் மட்டுமே பெண்கள் ஆவர்.

அந்தவகையில் Manthri.lk நடத்திய ஆய்வில், இந்த தரவுகளின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பாக இலங்கை 193 நாடுகளில் 182 வது இடத்தைப் பிடித்தமை தெரியவந்தது.

தெற்காசிய பிராந்தியத்தில் மாலதீவு 183 வது இடத்தைப் பிடித்த நிலையில், இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் கடைசிக்கு முதலிடத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை குறைந்த கல்வியறிவு விகிதங்களைக் கொண்டதும் அதிக பழமைவாத சமூகங்களைக் கொண்ட பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உயர்ந்த இடத்தில் உள்ளன.

2020 பொதுத் தேர்தலுக்கான அனைத்து முன்னணி அரசியல் கட்சிகளிடமிருந்தும் பெறப்பட்ட மொத்த வேட்புமனுக்களைப் பார்க்கும்போது, ​​பெண் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 10% வேட்பாளர்களைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுகின்றது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தல் வேட்புமனுக்களுக்கான 25% கட்டாய ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய நிலையில் அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் குறைந்தபட்சம் அதிக பெண் வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.

2020 பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான பெண் வேட்பாளர்கள் 17 பேர் ஒரு கட்சியின் சார்பாக போட்டியிடுகின்றனர். ஆயினும் ஒரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் குறைந்தது ஒரு பெண் வேட்பாளரைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறலாம்.

கடந்த 8 ஆவது நாடாளுமன்றத்திற்குள் தேசிய பட்டியல் மூலம் நுழைந்த 29 உறுப்பினர்களில் இரண்டு பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அதில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் தலா ஒருவர் அடங்குகின்றனர்.

தேசிய பட்டியல் என்பது நாடாளுமன்றத்தில் பாலின சமநிலையை உருவாக்க எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒன்று. எவ்வாறாயினும், தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு இது ஒரு கதவாகப் பயன்படுத்தப்படுவதை ஒவ்வொரு முறையும் காணக்கூடியதாக உள்ளது.

பெரும்பாலும், போட்டியிடும் மற்றும் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக மாறும் பெண் அரசியல்வாதிகள் அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருப்பார்கள். இந்த அரசியல் துறைக்கு வெளியே இருப்பவர்கள் அரசியலில் ஈடுபட மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள், மேலும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர்களைச் சுற்றியுள்ளவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

நிச்சயமாக, ஆண் வேட்பாளர்களைப் போலவே, மக்களின் வாக்குகளுக்கு தகுதியற்ற பெண் வேட்பாளர்களும் இருக்கலாம். இது பெண்களுக்கு வாக்களிக்கும் போது ஒருவர் கொண்டிருக்கக்கூடிய தேர்வுகளை மேலும் குறைக்கிறது.

எவ்வாறாயினும், ஒவ்வொரு வாக்காளருக்கும் 3 விருப்பு வாக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றமையினால், மூன்று வாக்குகளில், அவர்களில் ஒருவரையாவது ஒரு தகுதியான பெண் வேட்பாளருக்காக நீங்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் மாற்றம் எங்காவது தொடங்கப்பட வேண்டும்.