
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள்
ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இரண்டாயிரத்து 773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஸித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிகளவான சாதாரண வாக்கு எண்ணும் நிலையங்கள் கம்பஹா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அங்கு 289 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்து 72 ஆயிரத்து 309 ஆகும்.
இதில் 37 ஆயிரத்து 776 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 656 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தபால்மூல வாக்கு எண்ணும் நிலையங்கள் அதிகளவில் குருநாகல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு 40 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஸித்த பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலில் 25 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களை பிரதிநித்துவப்படுத்தி 7,456 பேர் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை பொது தேர்தலில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 10,500 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு படையினரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.