கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதி

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதி

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் 75 லயன் அறைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை நவீனப்படுத்தி கையளிக்க இருக்கிறோம் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(7) எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் கொண்டுவரப்பட்ட தோட்டங்கள் சார்ந்து காணப்படுகின்ற வீதிகளை அரசாங்கத்துக்கு சுவீகரித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,''பெருந்தோட்டங்களில் குவிந்திருக்கும் மலை போன்ற பிரச்சினைகளை படிப்படியாக தீர்ப்பதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன் முதல் கட்டமாக கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் 75 லயன் அறைகள் தெரிவு செய்யப்பட்டு அவற்றை நவீனப்படுத்தி கையளிக்க இருக்கிறோம்.

நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்னர் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு, மலையக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தேவையான செயற்றிட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி இருக்கிறோம்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதி | New House For Upcountry Peopleஅவர்களின் உரிமைகளை முறையாக படிப்படியாக வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இதன் முதல் கட்டமாக மார்ச் மாதம் நடுப்பகுதியில் கிளீன் சிறிலங்கா செயற்றிட்டத்தின் கீழ் மலையகத்தில் இருக்கும் 75 லயன் அறைகளை தெரிவு செய்து, அதனை நவீனப்படுத்தி கையளிக்கவிருக்கிறோம்.

இந்த வருடம் இந்திய அரசாங்கத்தின் உதவியில் பெருந்தோட்டத்தில் 5,700 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த வீடுகளை கடந்த அரசாங்கத்தின் போன்று அல்லாமல் அரசியல் நோக்கத்திலோ உறவினர்களுக்கோ வழங்குவதில்லை. மாறாக, கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண் சரிவு இடம்பெறும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படும் லயன்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இதேவேளை மலையகத்தில் தோட்டங்கள் தற்போது 24 கம்பனிகளிடமே இருக்கின்றன. தோட்டங்களை மாத்திரமல்ல, தோட்ட மக்களையும் சட்ட ரீதியிலோ சட்ட ரீதியாக இல்லாமலோ தோட்ட கம்பனிகளுக்கு சாட்டப்பட்டிருப்பது போன்றே இருக்கிறது.

தோட்டங்களில் வீதிகள் மாத்திரம் பிரச்சினை அல்ல. தோட்டத்தில் இருக்கும் ஒருவர் பொலிஸுக்குச் செல்வதாக இருந்தால் தோட்ட கம்பனியிடம் கடிதம் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.

பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதற்கு கடிதம் எடுக்க வேண்டும். வேறு பிரதேசங்களில் இவ்வாறான பிரச்சினை இல்லை. அதனால் நாட்டின் பிரஜையாக அவர்களின் பிரஜாவுரிமை சரியாக உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம்! அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதி | New House For Upcountry Peopleதோட்டங்களில் சிலருக்கு அடையாள அட்டை இல்லை. இன்னும் சிலருக்கு விவாக சான்றிதழ் இல்லை. மொத்தத்தில் தோட்டங்களில் வாழ்பவர்களுக்கு முகவரி ஒன்று இல்லை. வீடு இல்லை. காணி இல்லை. இவ்வாறு மலை போன்று பிரச்சினைகள் மலையக மக்களுக்கு இருந்து வருகிறது.

அத்துடன் தபால் திணைக்களத்துடன் கலந்துரையாடி தோட்ட மக்களுக்கு முகவரி ஒன்றை வழங்க இருக்கிறோம்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அதனை வழங்கவும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அந்த இடத்திலேயே அதனை வழங்கவும் நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம்.

அதனால் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.'' என கூறியுள்ளார்.