
திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உதவி தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் தெரிவித்தார்.
இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 288,868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் என்பன அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அனைத்து பகுதிகளுக்குமான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார சேவையினர்களது மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தலின் முன்னரும் பின்னரும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தொற்று நீக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் நாளை வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இம்முறை பதிவுசெய்யப்பட்ட 13 கட்சிகளும் 14 சுயற்சி குழுக்களும் 189 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.