வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு: நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் இரவு வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சபரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இரண்டு குடும்பங்களை சேர்ந்த எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/14 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும். அதுபோல சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/165 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.