2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்!

2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்!

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லா உட்பட 7 வீரர்கள் உயிரிழந்தார்கள்.

இதன்பின் இந்த ஸ்பேஸ் ஷட்டில் எனப்படும் விண்வெளி ஓடங்களின் செலவு மிக அதிகம் என்பதாலும், புதிய Constellation என்ற செயற்திட்டத்துக்கு அது உதவாது என்பதாலும் அமெரிக்கா தனது சொந்த மண்னில் இருந்து 2011 ஆமாண்டுக்குப் பின் ISS ஆய்வு மையத்துக்கு எந்த விண்ஓடத்தையும் அனுப்பவில்லை. இறுதியாக அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண் ஓடப் பயணத்தின் பின் இதுவரை ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷ்யாவின் சோயுஷ் ஓடங்களே வீரர்களை சுமந்து சென்று திரும்பி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் 9 வருடங்களுக்குப் பின் முதன் முறையாகத் தனியார் விண் ஓடங்கள் மற்றும் ராக்கெட்டு தயாரிப்பு நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதி நவீன விண் ஓடத்தில் மே 30 ஆம் திகதி சனிக்கிழமை ISS இற்கு நாசாவின், ராபெர்ட் பென்கென் மற்றும் டௌக்லஸ் ஹர்லே என்ற இரு வீரர்கள் பயணிக்கவுள்ளனர்.. புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்தில் இருந்து Falcon 9 ராக்கெட்டு மூலம் மேற்கொள்ளப் படவுள்ள இந்த் விண்வெளிப் பயணம் Demo-2 மிஷன் எனப் பெயரிடப் பட்டுள்ளது.

அதிநவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் தொடுதிரை இயக்கப் பொத்தான்கள் மூலம் இயங்கக் கூடிய Crew Dragon எனப்படும் இந்த விண்வெளி ஓடம் அடுத்த தலைமுறை விண் ஓடம் என்று கூறப்படுகின்றது. இந்த ஓடத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தானியங்கி மூலமாகவும் தீர்மானிக்கப் படலாம் என்பதால் இதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு பணி சுமை மிகவும் குறைவு என்றும் கூறப்படுகின்றது.

மேலும் கொலம்பியா ஸ்பேஸ் ஷட்டில் போன்றல்லாது ஸ்பேஸ் எக்ஸின் இந்தப் புதிய Crew Dragon ஓடம் வானில் பயணிக்கும் போது தொழிநுட்பக் கோளாறினால் ராக்கெட்டு வெடித்துச் சிதறினாலும், Crew Dragon ஓடம் உடனே பிரிந்து சென்று பாதுகாப்பாகத் தரையிறங்கக் கூடிய பொறிமுறையைக் கொண்டது ஆகும். எனவே இந்த விண்வெளிப் பயணம் விண்வெளி வீரர்களுக்கு மிக மிகப் பாதுகாப்பானது ஆகும்.

இதுவரை பூமியின் சுற்று வட்டப் பாதையில் பல்வேறு நோக்கங்களுக்காக செய்மதிகளை செலுத்தி வந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது இதுவே முதன் முறையாகும்.