முல்லைத்தீவு வீதி தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்
முல்லைத்தீவு (A035) வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் மிக முக்கியமான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதியிலுள்ள பாலத்தினூடாக கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு விதித்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த அறிவித்தலில்,
இந்த பாலமானது அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது.
இப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தது.
இந்நிலையில், அண்மைக்காலமாக இப்பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கீழ் குறிப்பிடப்பட்டவாறு மட்டுப்படுத்தப்படுகின்றது.
01. பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும் இப்பாலத்தினூடாக பயணிப்பது முற்றாக தடைசெய்யப்படுகின்றது.
02. பயணிகள் பேருந்து சேவையானது பயணிகளை இறக்கி விடப்பட்டு பின்னர் பாலத்தினூடாக பயணிக்க முடியும்.
03. ஏனைய அனைத்து வாகனங்களும் குறிப்பிட்ட வேகக்கட்டுப்பாட்டுடன் பயணிக்க முடியும். எனவே நிலைமையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு மேற்படி அறிவுத்தல்களை பின்பற்றுமாறு பொதுமக்கள் வேண்டப்படுகின்றீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.