யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கடற்படை வீரருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த கடற்படை வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் குறித்த கடற்படை வீரர் தற்போது விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட விடுதியில் பணியாற்றிய மருத்துவர்கள், தாதிமார்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கடற்படைவீரர், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு, இருதய துடிப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
முதல் இரண்டு தடவைகள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தது. அவர் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.
எனினும் மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் எமது பிராந்திய செய்தியாளர் தொடர்புகொண்டு வினவியப்போது பதில் எதனையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.