கோட்டாபயவின் தொல்லியல் ஆய்வு செயலணி உருவாக்கத்தால் ஆபத்தை எதிர்நோக்கும் சைவ ஆலயங்கள்

கோட்டாபயவின் தொல்லியல் ஆய்வு செயலணி உருவாக்கத்தால் ஆபத்தை எதிர்நோக்கும் சைவ ஆலயங்கள்

ஜனாதிபதியினுடைய தொல்லியல் ஆய்வு தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டதற்குப் பிறகு சைவ ஆலயங்கள் ஆபத்தை எதிர்நோக்கத் தொடங்குகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், வேட்பாளருமாகிய க.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இன்று காலை குசலானன்மலைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக எல்லைக்குள் உட்பட கரடியனாறு பிரதசத்தில் அமைந்துள்ள குசலானன் என்ற சிற்றரசனால் ஆளப்பட்ட பிரசேதம், குசலானன் மலை என்று சிறப்புப் பெயர் பெற்ற ஒரு முருகன் தலமாகும். இவ்வாறான சிறப்புக்களுடன் உள்ள இந்தத் தலத்தின் முருகன் விக்கிரகம் கடந்த வெள்ளிக் கிழமை உடைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆலயங்கள் சேதப்படுத்தப்படுவதென்பது கடந்த 2015ற்கு முன்பு நடைபெற்றதுண்டு. அவ்வப்போது சில வேற்று மதத்தவர்கள் வாழுகின்ற இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த அடிப்படையில் புதிய ஆட்சி ஏற்பட்டதன் பின்பு நடைபெற்ற முதலாவது சம்பவமாக இது இருக்கின்றது.

தற்போது மக்கள் மத்தியிலே இருக்கின்ற ஒரு பேச்சு என்னவென்றால் ஜனாதிபதியினுடைய தொல்லியல் ஆய்வு தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டதற்குப் பிறகு சைவ ஆலயங்கள் ஆபத்தை எதிர்நோக்கத் தொடங்குகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

அந்த வகையிலே தான் வேற்றுச் சேனையில் பௌத்த பிக்குகள் அங்கு வந்து வேற்றுச் சேனையில் இருக்கின்ற சைவ ஆலயத்தை ஆக்கிரமிப்புச் செய்ய முனைந்து மக்களின் எதிர்ப்பினால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதன் பின்னர் வெட்டிய மலை என்கின்ற இன்னுமொரு இடத்திலும் இதே விதமான சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்குகள் அங்கு வந்ததாகச் சொல்லப்படுகின்றது.

குடும்பிமலை நோக்கியும் பௌத்த பிக்குகள் வந்ததாகவும் கல்லடிவெட்டையுடன் அவர்கள் திரும்பிச் சென்றதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த சம்பவங்களுக்கும் இங்கு குசலானன் மலையில் சிலையுடைப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பது தெரியாது.

ஆனால் இந்த நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக சைவ மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது மக்களின் சாதாரண சக வாழ்வுக்கு ஏற்றதாக இருக்க மாட்டது. இவ்வாறு இத்தகைய செயல்களைச் செய்தவர்கள் இத்தோடு இந்தச் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாடு சுமூகமாக நல்லிணக்கத்தோடு இருப்பது மிகவும் இன்றியமையாதது. இவ்வாறு ஸ்தலங்கள் உடைக்கப்படும் செயற்பாடுகளை எதிர்ப்பதற்கும், தடுப்பதற்கும் சைவ மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றுபட்டு ஜனநாயக வழியில் செயற்படுவதற்கு பின்நிற்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்