
கொழும்பில் விரைவில் குடிசை வாழ்க்கை முறைமைக்கு முடிவு! பிரதமர் அறிவிப்பு
எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் கொழும்பில் குடிசை வாழ்க்கை முறைமைக்கு முடிவுக்கட்டப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை முறையான வீட்டுத்திட்டங்களில் குடிகுடியமர்த்தும் செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போதைய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளராக இருந்தபோது, குடிசைகளை அகற்றி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வீட்டு திட்டங்களில் மீளக்குடியமர்த்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், எமது அரசாங்கம் இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சரியான வீட்டுவசதி வழங்கும் ”என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகர் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தில் நிறுத்தப்பட்ட மற்றுமொரு அபிவிருத்தி திட்டமாகும்.
துறைமுக நகரத்தின் கட்டுமானம் எந்தவித இடையூறுகளும் இன்றி தொடர்ந்திருந்தால், எதிர்காலத் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் பெரும்பாலான திட்டங்களை இப்போதே முடித்திருக்க முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.