தேமுதிக தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் காலமானார்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (டிச.28) காலமானார். உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். அண்மை காலமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த டிச.12-ம் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின்னர், அவர் மீண்டும் நேற்று மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.