பிறந்து 40 நாட்களே ஆன குழந்தை எலி கடித்து மரணம்; நெஞ்சை உலுக்கிய சம்பவம்.
இந்தியாவின் தெலங்கானாவில் பிறந்து 40 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று எலி கடித்து மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாகர் கர்நூல் மாவட்டம் நாகனூல் கிராமத்தை சேர்ந்த சிவா, லட்சுமி கலா தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகும் நிலையில், கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையுடன் லட்சுமி கலா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் தூங்கிக்கொண்டிருந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் எலி ஏறி மூக்கை கடித்துள்ளது.
இதையடுத்து அருகே இருந்த மருத்துவமனையில் மருந்து பெற்று குழந்தையின் காயத்திற்கு தடவி வந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் ஊடுருவிய எலி மீண்டும் குழந்தையின் மூக்கின் மேல் இருந்த காயத்தில் கடித்தில் ரத்தம் சொட்டியுள்ளது.
குழந்தை அலறிய நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நீலோபர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலன் இன்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. பாதுகாப்பாக கவனிக்காததால் எலி கடித்து பச்சிளங் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.