பொதுத் தேர்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
தபால்மூல வாக்களிப்பு சதவீதம் குறித்து மீளாய்வு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேவைப்படும் பட்சத்தில் தபால் மூல வாக்களிப்புக்கான மேலதிக திகதிகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் பங்கேற்பது கட்டாயமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே தபால் மூலமான வாக்குகளை பதிவுசெய்யாதவர்கள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக . தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கு ஜூலை மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரையும் அதில் தவிர்க்க முடியாத காரணங்களினால் வாக்களிப்பதற்கு தவறியவர்களுக்கு ஜூலை மாதம் 20, 21 ஆகிய திகதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த தினங்களில் வாக்களிக்க தவறியவர்களுக்கு மேலும் இரு விசேடமாக நாளை மற்றும் நாளை மறுதினம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய தத்தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நாளை முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.00 மணிவரையும் நாளை மறுதினம் முற்பகல் 8.30 தொடக்கம் பிற்பகல் 2.00 மணிவரையும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள ஆணைக்குழு தெரிவித்துள்ளது