சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினர்.
விபத்தில் உயிரிழந்த 5 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கான இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக , குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் மாகாணத்தில் கெர்சர்ஸ் நகரில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சில் புகை மூட்டமாக காட்சி அளித்தது.
பிறகு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற முயன்ற போது, தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கியதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.