இன்று வெற்றிப் பயணத்தினை ஆரம்பிக்கும் இந்தியாவின் சந்திரயான் - 3

இன்று வெற்றிப் பயணத்தினை ஆரம்பிக்கும் இந்தியாவின் சந்திரயான் - 3

இன்று (14) சந்திரயான் - 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதால் கடலுக்குச் செல்ல கடற்றொழிலாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (14) பிற்பகல் 2.35 மணிக்கு சந்திரயான் - 3 விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில், குறித்த விண்கலத்திற்குரிய அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டங்களும் நிறைவு பெற்று எரிபொருள் நிரப்பும் பணிகளும் இப்போது முடிவந்துள்ள நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்கலம் ஏவப்பட உள்ளது.

இன்று வெற்றிப் பயணத்தினை ஆரம்பிக்கும் இந்தியாவின் சந்திரயான் - 3 | Fishermen Banned Going Sea Due Chandrayan Launch

சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல் வி எம் 3 எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான நேர எண்ணிக்கை நேற்று பிற்பகல் ஆரம்பமாகியது. 

அதன் அடிப்படையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் சந்திராயன் 3 விண்கலம் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் இன்று ஏவப்படுவதால் பழவேற்காடு கடற்றொழிலாளர்களுக்குச் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள வேளையில் எற்படக்கூடிய அசம்பாவிதங்களை தடுப்பதற்காக மீன்வள கூட்டுறவு சங்கங்கள் மூலம் திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் பழவேற்காடு பகுதி கடற்றொழிலாளர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திரயான் 3 வானில் ஒரு மாத பயணத்திற்கு பின் ஒகஸ்ட் மாதத்தில் நிலவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பின்னர் லாண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

இந்தியாவின் சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்ததால், சந்திரயான்-3 அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விண்கலத்தின் பயணம் வெற்றி பெற்றால், நிலவுக்கு விண்கலம் அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமையையும், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்த முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா தனதாக்கிக்கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன