ஊரடங்கு: தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை எனில் ஆடி அமாவாசை நாளில் செய்ய வேண்டியது என்ன?
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் எதிரே உள்ள அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினால் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராமேசுவரம் தலத்துக்கு ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் வந்து, அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் கூடுவார்கள். இதேபோல் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அன்றைய தினம் திதி, தர்ப்பண பூஜை நடக்கும்.
கொரோனா பரவலை தடுக்க விடுக்கப்பட்ட ஊரடங்கால் ராமேசுவரத்துக்கு கடந்த 3 மாதத்திற்கு மேலாக வெளியூர் பக்தர்களின் வருகை இல்லை. இந்தநிலையில் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம் தர்ப்பண பூஜையை நீர்நிலைகளுக்கு சென்று செய்ய முடியாத நிலை உள்ளது.
இதுபற்றி சங்கரமடத்தின் மேலாளர் சுந்தரவாத்தியார் கூறியதாவது:-
35 ஆண்டுகளுக்கு மேலாகவே புரோகிதர் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் புயல் ஏற்பட்டு தனுஷ்கோடி நகரமே அழிந்து ரெயில்பாதை சேதமானபோது கூட ஏராளமான பக்தர்கள் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிகளிலும் ராமேசுவரம் வந்து கடலில் நீராடி பூஜை செய்து சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளதாக கேள்விப்பட்டுள்ளோம்.
கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் புரோகிதர்கள் ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். பல்வேறு தொழில்களுக்கு தளர்வுகளை நீக்கி அரசு அனுமதி வழங்கி வருகிறது. மாவட்டத்திற்குள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்று வரலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதனால் புரோகிதர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டாவது, இந்த ஆண்டு ஆடி அமாவாசையன்று ஒரு நாள் மட்டும் கடற்கரை மற்றும் மற்ற நீர் நிலை கரைகளில் அமர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பாதுகாப்பான முறையில் பூஜை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம் புரோகிதர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
கொரோனா பரவல் தடுப்பு பொது ஊரடங்கால் ராமேசுவரத்தில் ஏராளமான புரோகிதர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். ஆடி அமாவாசை என்பது மிக முக்கியமான நாளாகும். அன்றைய தினம் ஊரடங்கால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய முடியாத பக்தர்கள், தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வருகிற 20-ந் தேதி தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் தொடங்கி மதியம் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றோருக்கு உணவும் அளிக்க வேண்டும். கடவுளை வேண்டி வழிபட்ட பின்பு, மதிய உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.