நேப் பாக்ஸ்... அலுவலகத்தில் குட்டித் தூக்கம் போட ஜப்பானில் ஓர் அசத்தல் கண்டுபிடிப்பு!

நேப் பாக்ஸ்... அலுவலகத்தில் குட்டித் தூக்கம் போட ஜப்பானில் ஓர் அசத்தல் கண்டுபிடிப்பு!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் கண்டுள்ள வளர்ச்சி உலக நாடுகளுக்கு என்றென்றும் ஒரு பாடம்தான். எறும்புபோல் சுறுசுறுப்பான மனிதர்கள் என்றுதான் ஜப்பானியர்கள் உலக மக்களால் அறியப்படுகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் அதிகப்படியான நேரம் வேலை பார்த்தல், வேலையிடங்களுக்கு மிக நீண்ட தூரம் புல்லட் ரயிலில் பயணித்தல் போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

அத்தகைய மக்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘நேப் பாக்ஸ்’. ஜப்பானின் இடோகி கார்ப் நிறுவனமும் கோயோஜு ஹோஹன் கேகே நிறுவனமும் இணைந்து வெர்டிக்கல் நேப் பாக்சஸ் "nap boxes" என்ற ஓர் உபகரணத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆங்கிலத்தில் நேப் என்றால் குட்டித் தூக்கம் என்று அர்த்தம். இதை பவர் நேப் என்றும் அழைக்கின்றனர். கடுமையான வேலைப்பளுவுக்கு இடையே ஒரு நபர் சரியாக 22 நிமிடங்கள் தூங்கினால் போதும்; அதன் பின்னர் அவர் செய்யக் கூடிய வேலையில் திறமை பளிச்சிடும் என ஆய்வுகள் கூறுகின்றன.

 

 

இந்நிலையில்தான் ஹொகைடோ தீவுகளின் ப்ளைவுட் சப்ளை நிறுவனமான கோயோஜு கோஹன் நிறுவனமும், டோக்கியோ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இடோகி என்ற ஃபர்னிச்சர் கடையும் இணைந்து இந்த நேப் பாக்ஸை தயார் செய்துள்ளது. இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆனால் இது செங்குத்தான ஒரு ஃபர்னிச்சராக வடிவமைக்கப்பட்டுள்ளது. கை, கால்கள், தலை, கழுத்து சவுகரியமாக நிலைநிறுத்தும் வகையில் அதன் உட்கட்டமைப்பு உள்ளது. அதில் உட்கார்ந்த படியே ஊழியர்கள் பவர் நேப் மேற்கொள்ளலாம்.

இது குறித்து இடோகி நிறுவனத்தின் இயக்குநர் சீகோ கவாஷிமா கூறுகையில், “ஜப்பானில் நீண்ட நேரம் பணி புரியும் பணிச் சுமை காரணமாக ஊழியர்கள் அவ்வப்போது கழிவறைகளில் குட்டித் தூக்கம் போட்டு திரும்பும் பழக்கம் உண்டு. அது நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல. அதற்கு மாற்றாகத் தான் இந்த நேப் பாக்ஸை கண்டுபிடித்துள்ளோம். இதனை ஊழியர்கள் சவுகரியமாக பயன்படுத்தலாம்.

இது ஜப்பானியர்களால் நிச்சயம் வரவேற்கப்படும். அதுபோல் நிறுவனங்களும் இதனை வாங்கி தங்கள் ஊழியர்களின் பயன்பாட்டுக்குத் தரும்” என நம்புகிறேன் என்றார்.