புதிய எரிபொருள் QR பதிவில் ஏற்பட்டுள்ள சிக்கல்! சற்றுமுன்னர் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமை இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய (QR Code) குறியீடுகளை பதிவு செய்யும் நடைமுறை இன்று பிற்பகல் ( 12) மணிக்குள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, (QR Code) முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று (15) காலை 6 மணி முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், முன்னர் QR குறியீட்டைப் பெற்று தற்போது அதே வாகனம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துபவர்கள் புதிய QR குறியீட்டை எந்த பிரச்சினையும் இல்லாமல் புதுப்பிக்கலாம் என்று அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் கூறுகின்றார்.
மேலும், வாகனங்கள் அல்லது தொலைபேசி இலக்கங்களை மாற்றியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து இன்று (15) ஆம் திகதி மாலையில் முடிவுகள் எடுக்கப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதாக அரசாங்க தகவல் துறை இயக்குநர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து வைக்கும் மாஃபியாக்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.