
ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் கிடைத்தது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
ராஜினாமா கடிதத்தின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் ஆராயப்படுவதாக சபாநாயகர் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தினை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியில் இருந்து 13 ஆம் திகதி விலகுவதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும் கடந்த 12 ஆம் திகதி அவர் நாட்டில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் மாலைத்தீவு நோக்கி பயணித்திருந்தார்.
இதனையடுத்து இன்றைய தினம் காலை அவர் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், சிங்கப்பூர் செல்லவிருந்த போதிலும், பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணிக்கவில்லை.
பின்னர் சவுதி அரேபிய விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அவர் இன்று மாலை சிங்கப்பூர் வந்தடைந்ததாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதி செய்திருந்தது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளி விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி சிங்கப்பூர் சென்ற பின்னர் பதவி விலகல் கடிதம் தரப்படும் என ஜனாதிபதி தொலைபேசியில் அறிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.