வெற்று பந்தாவை பார்த்தால் எரிச்சல் வருகிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க…

வெற்று பந்தாவை பார்த்தால் எரிச்சல் வருகிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க…

தன்னைப் பற்றியே மிகைப்படுத்திக் கூறிக்கொண்டு நேரத்தை வீணடிக்கும் பல மனிதர்களை நம் வாழ்க்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஒருவகையில் இந்தக் குணத்தைப் பார்க்கும்போது நேர்மறை எண்ணமாகக்கூட தெரியலாம். ஆனால் நேரம் போகபோக நமக்கே கோபம் வரும் அளவிற்கு அவர்களது செயல்கள் பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது.

இதைத்தான் Alfred adler என்னும் உளவியல் அறிஞர் Superiority Complex எனக் குறிப்பிடுகிறார். அதாவது ஏற்கனவே Inferiority Complex எனும் மன அழுத்தத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் சிலர், தன்னை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் மனம் வருந்தி, தன்னைப் பற்றி இந்த உலகம் பெரிதாக நினைக்க வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே மிகைப்படுத்திப் பேசத் துவங்குகின்றனர்.

இப்படி மிகைப்படுத்திப் பேசுவதால் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு வாழ்க்கையில் வெற்றிப் பெற்றவர்களாக மனதிற்குள் நம்பவும் செய்கின்றனர். பொய்யான இந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களது மனம் ஓரளவு சந்தோஷமும் அடைகிறது. ஆனால் உண்மையில் இது வெற்றியா? என்றால் இல்லவே இல்லை.

தன்னிடம் அழகு, அறிவு என எதுவுமே இல்லையென்று பயத்தில் இருக்கும் மனிதர்கள், தனது குறையை மற்வர்களிடம் இருந்து மறைப்பதற்காக இப்படியொரு பொய்யான மாய வலையைப் பின்ன ஆரம்பிக்கின்றனர். இதனால் நேரமும், மன அழுத்தமும் அதிகமாகுமே ஒழிய எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என அவர்களுக்குத் தெரிவதில்லை.

உண்மையில் Inferiority Complex-யைவிட Superiority Complex படு மோசமானது என்றே உளவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். அதாவது தன்னம்பிக்கை இல்லாத பல மனிதர்கள் சமூகத்தில் ஒடுங்கிப்போய் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்றனர். இவர்களைக் காட்டிலும் Superiority Complex இல் உழலும் மனிதர்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டு அதிலிருந்து வெளிவரத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த Superiority Complex ஒருசில சமயங்களில் நம்மிடமும் தலைக்காட்டத்தான் செய்கிறது. காரணம் மற்றவர்கள் முன்னிலையில் நாம் வெற்றிப்பெற்றவர்களாக, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்த மனிதர்களாகக் காட்டிக்கொள்ள விரும்பும் பட்சத்தில் இதே தவறை நாமும் செய்ய துவங்குகிறோம்.

உண்மையில் யாருக்காக நான் வெற்றிப்பெற வேண்டும் என்பதை கேள்விக்கேட்டுக் கொண்டால் மிக எளிதாக இந்த Superiority Complex இல் இருந்து வெளிவர முடியும். அதாவது பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக, மற்றவர்களை எதிர்கொள்ள முடியாமல் இருக்கும் சமயத்தில் நம்மை நாமே பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்வதற்காக இதுபோன்ற வெற்று பந்தாவில் மாட்டிக் கொள்கிறோம்.

எனவே பக்கத்து வீட்டுக்காரனுக்காக வெற்றிப்பெறுவதைக் காட்டிலும் நமக்காக, நம்முடைய சந்தோஷத்திற்காக வெற்றிப்பெற்றால் போதுமானது என்று மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் வெற்றுப் பந்தா எனும் தம்பட்டத்தில் இருந்து வெளிவர முடியும்.