கண்டி மாவட்டத்தில் 6,640 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள்

கண்டி மாவட்டத்தில் 6,640 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி பணிகள்

2022 ஆம் ஆண்டிற்கான கண்டி மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யப்பா பண்டார தலைமையில் மாவட்ட செயலகத்தில் கூடியது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளருமான பாரத் அருள்சாமி, 2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் ஊடாக கண்டி மாவட்டத்தில் நாம் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

6 ஆயிரத்து 640 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 7,137 வேலைத் திட்டங்கள் ஒரு லட்சம் தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்வரும் 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 2021 ஆம் ஆண்டு கொரோனா நோய்தொற்று அதிகரித்து நாடு ஸ்தம்பிதம் அடைந்து இருந்த நேரத்திலும் நாம் ஏறக்குறைய 20 மில்லியனுக்கு அதிகமான வேலைத்திட்டங்களை கண்டி மாவட்டத்தில் எமது அமைச்சின் ஊடாக முன்னெடுத்துள்ளோம்.

மேலும் அமைச்சின் வீடு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டின் முற்பகுதியில் 1,100 க்கும் அதிகமான இந்திய நன்கொடையுடன் அமைக்கப்படவுள்ள வீட்டு திட்டங்களையும் நாம் ஆரம்பிக்க உள்ளோம். மேலும் கல்வி அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, மற்றும் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னிலைப் படுத்தி கண்டி மாவட்டத்தில் இம்முறை எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் அமையும் என பாரத் அருள்சாமி என்று தெரிவித்தார்.