திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் உட்பட 26 பேருக்கு கொவிட்!

திருமண வைபவத்தில் பங்கேற்ற மணமகன் உட்பட 26 பேருக்கு கொவிட்!

மினுவாங்கொடை, கமரகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களின் திருமணத்தில் கலந்துகொண்ட 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 

தொற்று உறுதியானவர்களின் மணமகன்களில் ஒருவரான மூத்த சகோதரனுக்கு அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி பிரதேசத்ததைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுக்கு ஒரே நாளில் திருமணம் நடைபேற்றுள்ளது.

இரண்டு திருமணங்களும் சந்தலங்காவ பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்றதுடன், இரண்டாவது நாளான நேற்று திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதியில் திருமண வரவேற்பு வைபவம் இடம்பெற்றதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றன.

இந்த திருமணத்தில் இரு தரப்பிலும் சுமார் 350 பேர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. முதலில் ஒரு மணமகன் உட்பட ஆறு பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, கமரகொட ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற குறித்த திருமண விழாவில் கலந்து கொண்டவர்களில் 28 பேரை மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ரெபிட் என்டிஜென் பரிசோதனைக்கு அனுப்பியது.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 26 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த கமரகொட பிரதேசத்தில் வசிக்கும் பலரை தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் தங்களது சுகாதார அறிவுறுத்தல்களை புறக்கணித்து வருவதாகவும், திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் சிலர் ரெபிட் என்டிஜென் பரிசோதனைக்கு உள்ளாகவில்லை எனவும் அவர்களில் சிலருக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமைய, திருமண நிகழ்வுகளால் மீண்டும் கொவிட் பரவுவதற்கான சாத்தியங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளதால் திருமண நிகழ்வுகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.