அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ் (5), இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் (4), விசிக (2), ஐயுஎம்எல் (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. விஜய் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்திற்கு சென்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பிறகு, பெரியார் திடலுக்கு சென்று பெரியார மறைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று சட்டசபையில் வெற்றி பெற்றவர்கள் முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிறகட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.
மு.க. ஸ்டாலினை தொடர்ந்து வை.கோ, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரை சந்தித்தார். நாளை வி.சி.க. தலைவர் திருமாவளவனை சந்திக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார். அண்ணா முதல்வராக பதவி ஏற்றதும், காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அதன்பிறகு, முதலமைச்சராக பதவி ஏற்றவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்தது கிடையாது.
தற்போது சுமார் 59 வருடத்திற்குப் பிறகு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜய் மூத்த தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.
விஜயின் இந்த செயலை விசிக, இந்திய கம்யூனிஸ்டு பாராட்டியுள்ளது.
விஜயின் இந்த சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில் "தி.மு.க. கூட்டணி தலைவர்களிடம் வாழ்த்துகளை பெறும் முதலமைச்சரின் அணுகுமுறை பாராட்டுக்குரியது. அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்" என பாராட்டியுள்ளார். மேலும், அரத்தழுவி வரவேற்ற மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துகள். அனைத்து கட்சி தலைவர்களையும் விஜய் சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ் வரவேற்கிறது என்று வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.