மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து வைகோ, அன்புமணி, சீமானை சந்தித்த முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு பிறகு, அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் இன்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்யை, முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். இந்தச் சந்திப்பை "அரசியல் நாகரிகம்" என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மதிமுக தலைவர வைகோவையும் நேரில் சந்தித்துப் பேசினார். இதனை அண்ணா வெற்றிப்பெற்றபோது இப்படித்தான் நடந்துகொண்டார் என ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் வைகோ.
இந்த சந்திப்பை அடுத்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது அன்புமணி மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் விஜய்க்கு தனது குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தார் அன்புமணி.
அதன்பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்போது விஜய்யை வாசலுக்கு வந்து ஆரத்தழுவி கட்டியணைத்து அழைத்துச் சென்றார் சீமான். இந்த சந்திப்பின்போது சீமானின் மனைவி கயல்விழியும் உடன் இருந்தார்.
இதனைத்தொடர்ந்து நாளை பிரதமர் மோடியையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளார்.
முன்னதாக, ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.