ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (6) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குக் தீர்வு வழங்க கோரி நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (6) நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தங்களது உரிமைகளை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் விடுதலை முன்னணி , மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் கலந்துக் கொணடனர். நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களும் கல்விசாரா ஊழியர்களும் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தருமாறு கடந்த 24 வருடங்களாக கோரி வருகின்றனர்.

ஆனால் அதிபர், ஆசிரியர்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை முழுமையாக விளங்கிக்கொண்டும் அரசு தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை.

ஆகவே எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியே ஆசிரியர் தினத்தில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.

இது அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எதிரான போராட்டம் அல்ல. அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நியாயமான தீர்வை வழங்ககோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டத்தில் கலந்துக்கொண்ட அதிபர், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

கொவிட் 19 கொரோனா தொற்றின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

-மலையக நிருபர் தியாகு-