பணிச்சுமையைக் குறைக்கும் வழிமுறைகள்! - கைகொடுக்கும் ஆலோசனைகள்..!

பணிச்சுமையைக் குறைக்கும் வழிமுறைகள்! - கைகொடுக்கும் ஆலோசனைகள்..!

நம்முடைய வேலையில் திருப்தி இல்லாதபோது நிச்சயம் நமக்குப் பணிச்சுமை இருக்கும் உணர்வு தோன்றும்.

கொரோனா நோய்த்தொற்று உடலளவில் மனிதர்களை பாதிப்புக்குள்ளாக்கி விட்டது என்பதைத் தாண்டி, ஒவ்வொரு மனிதனையும் பொருளாதாரரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

நிதிநிலையைச் சமாளிக்க முடியாமல், பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையைக் கையிலெடுத்துள்ளன. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகியுள்ளது. இது வேலையில் இருப்பவர்களுக்கு அதிகமான பணிச்சுமையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலைச் சமாளிக்க ஸ்மார்ட்டாகவும், எல்லா இடங்களிலும் தன்னை முன்னிலைப்படுத்தியும் செயலாற்ற உதவும் வழிவகைகளை வழங்குகிறார் யுனோனா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், மனிதவளப் பிரிவின் தலைவருமான ஜாஃபர் அலி.

1. பாசிட்டிவ் மனிதராக இருங்கள்!

உங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய சக நண்பர்கள் இல்லை என்பது மிகப்பெரிய இழப்புதான். அதேநேரம் உங்களுக்கு வேலையிழப்பு ஏற்படவில்லை என்பதை பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேலையிழப்பு ஏற்பட்டிருந்தால் என்ன மாதிரியான சிக்கல்களை நீங்களும் உங்கள் குடும்பமும் எதிர்கொண்டிருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். அந்தச் சூழல் உருவாகாமலிருக்க உங்களின் திறமையும், வேலை செய்யும் நேர்த்தியும் மிக முக்கிய காரணங்கள். இதை நினைவில்கொண்டு முழு எனர்ஜியுடன் இயங்குங்கள்.

ஆட்குறைப்பு ஏற்பட்டிருப்பதால் அதிகப்படியான பணிச்சுமை இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், அதை உங்களை நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயலலாம். அது பணி உயர்வுக்கான வாய்ப்பாகவும் மாறும். நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தை நஷ்டத்திலிருந்தும், பொருளாதார சிக்கல்களிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருப்பதாக எண்ணி உங்கள் பணியைத் தொடங்குங்கள். உங்கள் பணியைக் காதலிக்கும்போது, வேலை நேரம் உங்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறும்.

2. திட்டமிடுங்கள்!

இன்று என்ன பணி செய்யப்போகிறோம், அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை முன்பே திட்டமிட்டுக்கொண்டால் பதற்றமில்லாமல் இருக்கலாம். இதனால் தேவையில்லாத மன அழுத்தமும் இருக்காது. நொறுக்குத்தீனிக்கான இடைவேளை, மதிய உணவு இடைவேளை போன்றவற்றுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். எல்லா வேலைகளையும் தனியே செய்ய வேண்டும் என்று எண்ணாமல், குழுவாக இணைந்து செயல்படத் திட்டமிடுங்கள். குழுவாக இணைந்து செய்யும்போது அதிகமான வேலைகளையும், வித்தியாசமான வேலைகளையும் செய்ய முடியும். புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் முடியும். எப்போதும் நிறைய வேலைகள் செய்ய வேண்டும் என்று எண்ணாமல், செய்யும் வேலையை முடிந்த வரை தரமானதாகவும், சிறப்பானதாகவும் செய்து முடியுங்கள். உங்கள் பணியில் நீங்கள் அடையும் மன திருப்தியே உங்களைச் சலிப்பின்றி வேலை செய்யத் தூண்டும். நிறுவனத்தில் உங்களுக்குச் சிறப்பான அடையாளமும் கிடைக்கும்.

3. பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள்!

வேலை நேரத்தில் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஐந்து நிமிடங்கள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் லேப்டாப், இ-மெயில், போன்றவற்றிலிருந்து விடுபடுங்கள். சின்ன நடைப்பயிற்சி, மனதுக்குப் பிடித்த பாடல்கள் போன்றவை உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். உங்களுடைய பர்சனல் நேரங்களில் அலுவலகம் பற்றியோ, அலுவலக நண்பர்கள் பற்றியோ யோசித்து டென்ஷன் ஆக வேண்டாம். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், மனதால் ‘குட் பை’ சொல்லிவிடுங்கள். அப்போதுதான் அடுத்த நாள் உற்சாகமாக வேலை செய்ய இயலும்.

பணிச்சுமை

4. தலைமையுடன் சுமுகமான உறவு!

ஒருபக்கம் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் குவிந்திருக்கும். இன்னொரு புறம், தலைமையிடமிருந்து அப்டேட்டுகள் கேட்டு போன் வந்துகொண்டே இருக்கும். எந்தப் பணியை முதலில் செய்வதென்றே தெரியாமல் சில வேலைகளைத் தவறவிடவும் வாய்ப்புண்டு. இதனால் தலைமைக்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டாகலாம். இதைத் தடுக்க, தலைமை அதிகாரிகளுடன் சுமுகமான உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். எந்தப் பணி முதன்மையானது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிடுங்கள். நீங்கள் அன்றாடம் செய்யும் பணிகளை அவ்வப்போது உங்கள் தலைமைக்கு தெரியப்படுத்திக்கொண்டே இருங்கள். அதே நேரம், உங்களுக்கு இருக்கும் நியாயமான பிரச்னைகளையும் தெரியப்படுத்துங்கள்.

மன அழுத்தம் மிகுந்திருக்கும் நாளில் விடுமுறை எடுத்துக்கொண்டு, அடுத்த நாள் ஃப்ரெஷ்ஷாகப் பணிகளைச் செய்யத் தொடங்கும்போது, பணிச்சுமை உங்களைச் சூழ்ந்துள்ளது என்ற உணர்வில்லாமல் இருக்க முடியும்.

5. புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் நேரம் இது!

உங்கள் பணி சார்ந்தவற்றிலும், தொழில் நுட்பங்களிலும் அப்டேட்டாக இருப்பது அவசியம். அப்டேட்டாக இருக்கும்போது விரைவாகவும், ஸ்மார்ட்டாகவும் வேலைகளைச் செய்து முடிக்க முடியும். அதனால் எப்போதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருக்கும் சூழலிலிருந்து தப்பிக்க முடியும். அலுவலகங்களில் தற்போது நிறைய பணிகள் காலியிடங்களாக இருக்கும். நேரமிருக்கும்போது புதிய பணிகளைக் கற்றுக்கொண்டு பன்முகத் திறமையோடு விளங்கினால் வேலை பற்றிய பயமின்றி ரிலாக்ஸாக வேலை செய்யலாம்.

பணிச்சுமை

6. சமூக வலைதளங்களிலிருந்து தள்ளி இருக்கலாமே!

வேலை நேரத்தில் சமூக வலைதளங்கள் பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கும். கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ள ஐந்து நிமிடங்கள் பார்க்கலாம் என்று எண்ணினாலும், சமூக வலைதளங்கள் நம்முடைய பல மணி நேரங்களைக் காலி செய்துவிடும். அதன் பிறகு அவசர அவசரமாக வேலைகளைச் செய்து கொடுக்கும்போது மன அழுத்தம் ஏற்பட்டு, வேக வேகமாகச் செய்து முடிக்கும்போது அந்த வேலையைக் கடனுக்கு செய்து முடிப்போம். நம்முடைய வேலையில் திருப்தி இல்லாதபோது நிச்சயம் நமக்குப் பணிச்சுமை இருக்கும் உணர்வு தோன்றும். அதேபோல அலுவலக நேரத்தில் ஷாப்பிங் செல்வது, வங்கிகளுக்குச் செல்வது போன்றவை அலுவலக நேரத்தை வீணடிக்கும். அதனால் அலுவலக நேரத்துக்குப் பிறகும் வேலை செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இதனால் பணிமீது சலிப்பு ஏற்படும்.

7. ஒப்பிடுதல் வேண்டாமே!

அலுவலக நேரத்திலும், பணிகளிலும் மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தால் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி பற்றிச் சிந்திக்க முடியாது. மற்றவர்களுடன் தேவையில்லாமல் உங்களை ஒப்பிடாதீர்கள். நம் உற்சாகம் கொஞ்சம்கூடக் குறையாமல் வேலை பார்த்தால் நம் பணிச்சுமை நமக்குத் தெரியவே தெரியாது!