சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மொரட்டுவைக்கு அனுப்பி வைப்பு

சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மொரட்டுவைக்கு அனுப்பி வைப்பு

வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டின் பின் பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக் காயத்துடனும் நேற்று (07) காலை சடலமாக மீட்கப்பட்டான்.

சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார் வவுனியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி ஈ.ஜி.யூ.என்.குணரட்ண மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்து.

இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளமையால் உடலை எரியூட்டாமல் புதைக்க வேன்டும் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டு சடலம், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.