இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் ஊடாகவே நாணயப் பெறுமதியை நிலையாக பேண முடியும் - நிதி இராஜாங்க அமைச்சர்
ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கான கணிப்பீட்டை மத்திய வங்கி மேற்கொண்டுள்ள போதும், அது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குளிர்சாதனம், தொலைபேசி, தொலைகாட்சிகள் என்பவற்றுடன் வாசனைத் திரவியங்களுக்கும் இறக்குமதி தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இதுதொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் ஊடாகவே நாணயப் பெறுமதியை நிலையாக பேண முடியும். இதற்காக வாகன இறக்குமதி தடையைக் கூட விரும்பி அமுல்படுத்தவில்லை. இதுகுறித்து ஆராயப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.