அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இரண்டாம் செலுத்துகையாக பைஸர் தடுப்பூசி
நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கை கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இரண்டாவது செலுத்துகையை மேற்கொள்ளும்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (05) அதிகாலை 26,000 பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள முதலாவது நாடு இலங்கை என ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும், பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதலாவது தெற்காசிய நாடு இலங்கை எனக் கூறப்பட்டாலும் இலங்கைக்கு முன்னதாகவே, கடந்த மார்ச் 5 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் மாலைத்தீவு ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டது.
இந்த திட்டத்தின் கீழ் 5, 859 பைஸர் தடுப்பூசிகளை மாலைத்தீவு பெற்றுக்கொண்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.