26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

இலங்கை கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று (05) அதிகாலை 26,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து டோஹாவுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த தடுப்பூசிகள், கட்டார் விமான சேவையின் கிவ். ஆர். 663 என்ற விமானத்தின் மூலம் இன்று (05) அதிகாலை 2.15 அளவில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, தெற்காசிய பிராந்தியத்தில் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ள முதலாவது நாடு இலங்கையாகும் என ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

மறை 70 பாகை செல்சியஸ் வெப்பநிலையில், பைசர் தடுப்பூசிகளைக் களஞ்சியப்படுத்த வேண்டும்.

எனவே, இதனைப் பயன்படுத்துவதற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாகும்.
இதற்கமைவான களஞ்சிய வசதிகளை, அரச ஒளடதக் கூட்டுத்தாபனமும், நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய இரத்தமாற்று சேவை என்பன இணைந்து களஞ்சிய வசதிகளை மேம்படுத்தியுள்ளன.

இதனை ஆராய்ந்த பைசர் நிறுவனம், இலங்கை தமது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானது என அனுமதி வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.