புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ரபீக் நியமனம்

புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ரபீக் நியமனம்

புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் இன்று (01) தெரிவு செய்யப்பட்டார்.

புத்தளம் நகர சபையின் தலைவராக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி திடீர் விபத்து ஒன்றில் உயிரிழந்தமையை அடுத்து, புத்தளம் நகர சபையின் உபதலைவரான சுஷாந்த புஷ்பகுமார ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பதில் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில் புத்தளம் நகர சபையில் ஏற்பட்ட தலைவர் பதவி வெற்றிடத்திற்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பதற்கான தெரிவு இன்று (01) காலை 10.30 மணிக்கு சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் ஐ.எம். இளங்ககோன் தலைமையில் இந்த புதிய தலைவரைத் தெரிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது வாக்கெடுப்புக்கான சகல ஏற்பாடுகளும் மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளரினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான நகர சபையின் உப தலைவர் சுஷாந்த புஷ்பகுமார, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.எஸ்.எம். ரபீக்கை தலைவராக நியமிப்பதாக அவருடைய பெயரை சபையில் கூறினார்.

இதனை அடுத்து சபா மண்டபத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு எவ்வித ஆட்சேபனைகளையும் தெரிவிக்காது இதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து, புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக மு.கா உறுப்பினர் எம்.எஸ்.எம். ரபீக் போட்டி இன்றி தெரிவானார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ( NFGG) ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளையும் ஒரு சுயேட்சைக் குழுவையும் உள்ளடக்கிய வகையில் 19 உறுப்பினர்களைக் கொண்ட புத்தளம் நகர சபையின் ஆட்சி மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமானது.

இவ்வாறு புத்தளம் நகர சபையின் புதிய தலைவராக ரபீக் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, மு.கா ஆதரவாளர்கள் புத்தளம் நகர சபைக்கு முன்னால் ஒன்றுகூடி புதிய தலைவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் புத்தளம் நகர சபையின் புதிய தலைவருக்கு நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் புத்தளம் நகர சபையின் புதிய நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்னாள் புத்தளம் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் அடக்கஸ்தலத்திற்குச் சென்று விஷேட துஆப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை, காலஞ்சென்ற முன்னாள் புத்தளம் நகர பிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸின் நகர சபை உறுப்பினர் வெற்றிடத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரான ஜௌபர் மரிக்கார் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.