தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடத்துக்கு சேதம் விளைவித்த குழுவினர் தொடர்பில் விசாரணை
கற்பிட்டி - பள்ளிவாசல்துறை பகுதியில் அமைந்துள்ள தொல்பொருள் பெறுமதிவாய்ந்த இடமொன்றில் அத்துமீறி பிரவேசித்து அதனை சேதப்படுத்திச் சென்ற குழு ஒன்று குறித்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கற்பிட்டி பிரதேச செயலாளர் மற்றும் கிராம அதிகாரிகளின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளின் தகவல்படி, இந்த பகுதியில் அல்லிராணியின் கோட்டை ஒன்று அமைந்திருந்ததாகவும், அது தொல்பொருள் பெறுமதி வாய்ந்த இடமாக பெயரிடப்பட்டிருப்பதுடன், அந்த பகுதி அரசுக்கு சொந்தமான காணி என்றும் அறியமுடிகிறது.
ஏற்கனவே இந்த பகுதியை விளையாட்டு மைதானமாக மாற்றித் தருமாறு பிரதேசத்தில் சிலரால் தமக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும், எனினும் அந்த கோரிக்கையை தாம் நிராகரித்து வருவதாகவும் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரகித் டனன்சூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காணிப் பகுதி கடந்த 2017ம் ஆண்டு ஒருவரால் போலியான உறுதிபத்திரம் ஊடாக சுவீகரிக்கப்பட்டிருந்த போதும், பின்னர் அது போலியானது என நிரூபிக்கப்பட்டு மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவற்துறையினர் நீதிமன்றில் வழக்கு தொடரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.